Last Updated : 09 Apr, 2018 06:11 PM

 

Published : 09 Apr 2018 06:11 PM
Last Updated : 09 Apr 2018 06:11 PM

உ.பி.பாஜக எம்எல்ஏ மீது பாலியல் புகார் வழக்கு: பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை சிறையில் மர்ம மரணம்

பாஜக எம்எல்ஏ மீது பலாத்கார புகார் கூறி, உ.பி.முதல்வர் வீட்டு முன் தீக்குளிக்க இளம் பெண் ஒருவர் முயன்றார். அந்த பெண்ணின் தந்தை போலீஸ் நிலையத்தில் மர்மமான முறையில் இன்று மரணமடைந்துள்ளார்.

உத்தரப் பிரதேச தலைநகர் லக்னோவில் இருந்து 90 கி.மீ. தொலைவில் உன்னாவ் மாவட்டம் அமைந்துள்ளது. இங்குள்ள பங்கார்மவு சட்டப்பேரவைத் தொகுதி எம்எல்ஏ குல்தீப் சிங் செங்கார்.

குல்தீப் சிங் தன்னை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டதாகக் கூறி 18 வயது இளம் பெண் கடந்த ஆண்டு ஜூன் மாதம் கவுதம்பாலி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். ஆனால், அங்கிருந்த போலீஸ் நிலைய அதிகாரி விஜய் சென் சிங் புகாரை வாங்க மறுத்துவிட்டார். அவர் பல முறை போலீஸ் நிலையததில் முறையிட்டும் புகாரைப் பெற மறுத்துவிட்டனர்.

இதையடுத்து, நேற்று காலை லக்னோவில் உள்ள முதல்வர் யோகி ஆதித்யநாத் வீட்டு முன் இருக்கும் கோல்ப் மைதானத்தில் அந்த இளம் பெண் வந்தார். தான் கையில் வைத்திருந்த மண்ணெண்ணெயை உடலில் ஊற்றி தற்கொலைக்கு முயன்றார். அதற்குள் அங்கிருந்த போலீஸார், பாதுகாவலர்கள் அந்தப் பெண்ணை மீட்டு தற்கொலையில் இருந்து காப்பாற்றி அழைத்துச் சென்றனர். அந்தப் பெண் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில், நேற்று இரவு அந்த இளம்பெண்ணின் தந்தை சுரேந்திர சிங்கை கவுதம்மாவு போலீஸார் விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.  இந்நிலையில் போலீஸ் நிலையத்தில் மர்மமான முறையில் சுரேந்திர சிங் இறந்துள்ளார்.

இது குறித்து உன்னவ் மாவட்ட போலீஸ் எஸ்பி புஷ்பாஞ்சலி தேவி கூறுகையில், 'எம்எல்ஏ மீது பாலியல் புகார் கொடுத்த பெண்ணின் தந்தை சுரேந்திர சிங்கை போலீஸார் நேற்று விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரை 4  பேர் தாக்கியுள்ள விசாரணையில் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக அந்த 4 பேரையும் கைது செய்துள்ளோம்' என்று தெரிவித்தார்.

இது குறித்து சுரேந்திர சிங்கை பரிசோதனை செய்த டாக்டர் கூறுகையில், 'போலீஸார் நேற்று இரவு சுரேந்தர் சிங்குக்கு உடல் நிலை சரியில்லை வயிற்றுவலியால், துடிக்கிறார், வாந்தி எடுக்கிறார்  என்று மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். அவரை பரிசோதனை செய்ததில் அவர் ஏற்கனவே இறந்துவிட்டது தெரியவந்தது' என்று தெரிவித்தனர்.

இது குறித்து உன்னவ் மாவட்ட ஆட்சியர் ரவிக்குமார் விசாரணை நடத்த முதல்வர் ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். சுரேந்திர சிங்கின் உடற்கூறு அறிக்கையும் அனுப்பிவைக்க துணை மண்டல கலெக்டர் மணிஷ் பன்சால் கேட்டுள்ளார்.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து போலீஸ் நிலையத்தின் இன்ஸ்பெக்டர் மாகி அசோக் சுக்லா, 3 கான்ஸ்டபிள்களை இடைநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது. மேலும், சிறையில் சுரேந்திரங் சிங்கை தாக்கியதாகக் கூறப்படும் 4  பேரையும் கைது செய்யவும் உத்தரவிட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x