

காங்கிரஸ் முன்னாள் செய்தித் தொடர்பாளர் ரோஹன் குப்தா நேற்று அக்கட்சியை விட்டு விலகி பாஜகவில் இணைந்தார். தலைநகர் டெல்லியில் மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி, பாஜக தேசிய பொதுச் செயலாளர் வினோத் தாடே ஆகியோர் முன்னிலையில் காங்கிரஸ் நிர்வாகிகள் சிலருடன் ரோஹன் குப்தா பாஜகவில் இணைந்தார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, “பயண திசை தெரியாமலும் முரண்பாடுகள் நிறைந்ததாகவும் காங்கிரஸ் உள்ளது. இதனால் அக்கட்சி நம்பகத்தன்மையை இழந்துவிட்டது” என்றார்.
இதற்கு, ராமர் கோயில் திறப்பு விழாவில் பங்கேற்பதில்லை என முடிவு எடுத்தது, சிஏஏ-வுக்கு ஆதரவு, ஆம் ஆத்மியுடன் கூட்டணி போன்ற பல்வேறு விவகாரங்களில் காங்கிரஸ் நிலைப்பாட்டை அவர் சுட்டிக் காட்டினார்.
2047-ம் ஆண்டுக்குள் வளர்ச்சியடைந்த பாரதம் என்ற பாஜகவின் செயல்திட்டத்துக்கு ரோஹன் குப்தா தனது ஆதரவை தெரிவித்தார். பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையை அவர் பாராட்டினார். காங்கிரஸ் கட்சியின் மற்றொரு செய்தித் தொடர்பாளர் கவுரவ் வல்லப் சமீபத்தில் பாஜகவில் இணைந்தார். அவரும் பல்வேறு விவகாரங்களில் காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாட்டை விமர்சித்தார்.