Published : 12 Apr 2024 06:13 AM
Last Updated : 12 Apr 2024 06:13 AM

ஒட்டுமொத்த இந்தியர்களும் எனது குடும்பம்: உத்தராகண்ட் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி நெகிழ்ச்சி

உத்தராகண்ட் மாநிலம் ரிஷிகேஷில் நேற்று நடைபெற்ற பாஜக பிரச்சார கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். அப்போது கட்சியின் பெண் நிர்வாகிகள் அவருக்கு நினைவு பரிசினை வழங்கினர். படம்: பிடிஐ

ஒட்டுமொத்த இந்தியர்களும் எனது குடும்பம் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

உத்தராகண்ட் மாநிலத்தில் 5 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகளுக்கு வரும் 19-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. ஐந்து தொகுதிகளில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து உத்தராகண்ட் மாநிலத்தின் ரிஷிகேஷில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:

உத்தராண்டின் 4 முக்கிய புனித தலங்களும் சாலை மார்க்கமாக இணைக்கப்பட்டு உள்ளன. மாநிலத்தின் அனைத்து கோயில்களின் அடிப்படை வசதிகளும் மேம்படுத்தப்பட்டு உள்ளது. ரிஷிகேஷுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது.

காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் நமது வீரர்களுக்கு குண்டு துளைக்காத ஜாக்கெட்டுகள் வழங்கப்படவில்லை. பாஜக ஆட்சிக் காலத்தில் உள்நாட்டிலேயே இந்த வகை ஜாக்கெட்டுகள் தயாரிக்கப்பட்டு அனைத்து வீரர்களுக்கும் வழங்கப்பட்டு உள்ளன.

அதிநவீன துப்பாக்கிகள், நவீனபோர் விமானங்கள் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டு வருகின்றன. நாட்டில் எல்லைப் பகுதிகளில் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன.

மத்தியில் வலுவான அரசு ஆட்சி நடத்தி வருகிறது. இதன்காரணமாக நமது வீரர்கள் தீவிரவாதிகளின் பதுங்குமிடங்களுக்கே சென்று அவர்களை அழித்து வருகின்றனர். குறிப்பாக பாகிஸ்தானின் பாலகோட்டில் பதுங்கியிருந்த தீவிரவாதிகள் அழிக்கப்பட்டனர். மத்தியில் பலவீனமான அரசு ஆட்சி நடத்தினால் தீவிரவாதிகள் மீண்டும் தலைதூக்கும் அபாயம் எழும்.

கடந்த 10 ஆண்டுகளில் நாட்டின் நலன் கருதி துணிச்சலான முடிவுகள் எடுக்கப்பட்டு உள்ளன. குறிப்பாக, காஷ்மீருக்கான சிறப்புஅந்தஸ்து நீக்கப்பட்டு உள்ளது.

பெண்களுக்கான 33 சதவீத இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டிருக்கிறது. பொருளாதாரத்தில் நலிவுற்ற பிரிவினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டு உள்ளது.

காங்கிரஸை பொறுத்தவரை ஒரு குடும்பத்தின் நலனில் மட்டுமே அக்கறை கொண்டிருக்கிறது. என்னைப் பொறுத்தவரை அனைத்து இந்தியர்களும் எனது குடும்பம். அவர்களின் நலனுக்காக இரவு, பகலாக உழைத்து வருகிறேன்.

பாஜக ஆட்சிக் காலத்தில் உத்தர பிரதேசம், அயோத்தியில் பிரம்மாண்ட ராமர் கோயில் கட்டப்பட்டு உள்ளது. இந்த கோயிலின் திறப்பு விழாவில்கூட காங்கிரஸ் தலைவர்கள் பங்கேற்கவில்லை.

வளர்ச்சி அடைந்த உத்தராகண்ட், வளர்ச்சி அடைந்த பாரதம் என்ற கொள்கையுடன் பாஜக முன்னேறி வருகிறது. உத்தராகண்ட் மாநிலத்தின் 5 மக்களவைத் தொகுதிகளிலும் பாஜக வெற்றி பெறும். இவ்வாறு பிரதமர் தெரிவித்தார்.

மாலத்தீவு அதிபருக்கு வாழ்த்து: மாலத்தீவு அதிபர் முகமது முய்சுவுக்கு பிரதமர் நரேந்திர மோடி நேற்று ரம்ஜான் வாழ்த்து தெரிவித்தார்.

இதுதொடர்பாக அவர் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “மாலத்தீவு அதிபர் முகமது முய்சுவுக்கும் மாலத்தீவு மக்களுக்கும் ரம்ஜான் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இரு நாடுகளும் மிக நீண்ட காலம் நட்புறவை கொண்டுள்ளன. ரம்ஜான் திருநாளில் அன்பு, சகோதரத்துவம், ஒற்றுமை மலரட்டும்” என்று கூறியுள்ளார்.

ராஜஸ்தானில் பிரச்சாரம்: ராஜஸ்தானின் கவுரலி பகுதியில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று பேசும்போது, "ஊழல்வாதிகள் சிறையில் அடைக்கப்படுவார்கள் என்று நான் வாக்குறுதி அளித்துள்ளேன்.

இதன் காரணமாகவே எனக்கு எதிராக இண்டியா கூட்டணி உருவாக்கப்பட்டிருக்கிறது. நான் ஊழலை ஒழிக்க போராடி வருகிறேன். மறுபுறம் ஊழலை காப்பாற்ற எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் அணி திரண்டு உள்ளனர்.

காங்கிரஸின் இளவரசர் (ராகுல் காந்தி) வெளிநாடுகளில் சுற்றுப் பயணம் செய்து, இந்தியா குறித்து அவதூறான தகவல்களை பரப்பி வருகிறார். இந்திய ராணுவம் துல்லிய தாக்குதல் நடத்தியபோது, ராணுவத்தின் மீதே காங்கிரஸ் கட்சி சந்தேகம் எழுப்பியது. மக்களவைத் தேர்தலில் அந்த கட்சியை முற்றிலுமாக புறக்கணிக்க வேண்டும்" என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x