“அராஜகம், உறுதியின்மை, ஊழலுக்கானது காங்கிரஸுக்கான வாக்குகள்!” - எடியூரப்பா

“அராஜகம், உறுதியின்மை, ஊழலுக்கானது காங்கிரஸுக்கான வாக்குகள்!” - எடியூரப்பா
Updated on
1 min read

பெங்களூரு: காங்கிரஸுக்கு அளிக்கப்படும் வாக்குகள் என்பது அராஜகம், பொருளாதார திவால், ஊழல், உறுதியற்ற தன்மை ஆகியவற்றுக்கானவையாக இருக்கும் என்றும், அது நாட்டின் உள்நாட்டுப் பாதுகாப்பை ஆபத்தில் தள்ளும் என்றும் பாஜக மூத்த தலைவர் எடியூரப்பா விமர்சித்துள்ளார்.

பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் தலைமை முற்றிலும் தோல்வியடைந்துவிட்டது. பிரச்சாரத்தின்போது ராகுல் காந்தியின் பெயரைக் கூற அவரது கட்சியைச் சேர்ந்த யாரும் தயாராக இல்லை. இந்தத் தேர்தல் நாட்டின் பாதுகாப்பு மற்றும் ஒருமைப்பாட்டுக்கானது. கர்நாடகாவில் மொத்தமுள்ள 28 மக்களவைத் தொகுதிகளிலும் பாஜக - மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணி வெற்றி பெறும்.

கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சிக்கு நம்பகமான தலைமை இல்லை. சாதனைகள் என்று சொல்வதற்கு மாநில அரசிடம் ஒன்றுமில்லை. பாஜகவுக்கு எதிராக பொய் பிரச்சாரம் செய்து மக்களின் ஆதரவைப் பெற்றுவிடலாம் என்ற மாயையில் காங்கிரஸ் தலைவர்கள் உள்ளனர்.

காங்கிரஸுக்கு வாக்களிப்பது என்பது ஊழலுக்கான வாக்கு, நாட்டின் பொருளாதாரத்தை திவாலாக்குவதற்கான வாக்கு, நாட்டின் ஸ்திரமின்மைக்கான வாக்கு, நாட்டின் உள்நாட்டுப் பாதுகாப்பை ஆபத்தில் தள்ளும் வாக்கு. பாதுகாப்பான மற்றும் நிலையான இந்தியாவை உருவாக்கும் தலைமையாகவும், பொருளாதார வளர்ச்சி மற்றும் நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கான தலைமையாகவும் பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையை பார்க்கிறேன்.

மக்கள் பாஜக மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்களிப்பார்கள். என்டிஏ அணிக்கு 400 இடங்களுக்கு மேல் வெற்றியை அளிக்க நாட்டு மக்கள் ஏற்கெனவே ஒப்புதல் அளித்துள்ளனர். சாதி, மதம், மொழி ஆகியவற்றின் அடிப்படையில் நாட்டைப் பிளவுபடுத்த குரல் எழுப்பும் இண்டியா கூட்டணியை மக்கள் முற்றாக நிராகரிப்பார்கள்" என தெரிவித்தார்.

கர்நாடகாவில், மொத்தமுள்ள 28 தொகுதிகளுக்கு ஏப்ரல் 26 மற்றும் மே 7 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற இருக்கிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in