Published : 11 Apr 2024 02:37 PM
Last Updated : 11 Apr 2024 02:37 PM

நாட்டில் பலவீனமான அரசுகள் இருந்தபோதெல்லாம் பயங்கரவாதம் பரவியது: பிரதமர் மோடி பேச்சு

ரிஷிகேஷ் தேர்தல் பிரச்சார மேடையில் உடுக்கை வாசித்த பிரதமர் மோடி

ரிஷிகேஷ்: நாட்டில் பலவீனமான, நிலையற்ற அரசுகள் இருந்தபோதெல்லாம், எதிரிகள் அதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

உத்தராகண்ட்டின் ரிஷிகேஷ் நகரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் உரை நிகழ்த்திய பிரதமர் நரேந்திர மோடி, “நாட்டில் தற்போது வலிமையான அரசு உள்ளது. இதன் காரணமாக நமது ராணுவ வீரர்கள், பயங்கரவாதிகளை அவர்களின் நாட்டுக்குள்ளேயே புகுந்து கொல்கிறார்கள்.

ஆனால், எப்போதெல்லாம் பலவீனமான அரசுகள் இருந்தனவோ அப்போதெல்லாம் அதனை நமது நாட்டின் எதிரிகள் தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டிருக்கிறார்கள். அப்போதெல்லாம் பயங்கரவாதம் பரவியிருக்கிறது.

காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில், எல்லைப்புற கிராமங்கள் கடைசி கிராமங்கள் என அழைக்கப்பட்டன. மோடி அரசு அதனை முதல் கிராமம் என அழைக்கிறது. அத்தகைய முதல் கிராமங்களில் வளர்ச்சிப் பணிகள் முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ராமர் என்பவர் இருந்தாரா என்பது உள்பட பகவான் ராமர் குறித்து பல்வேறு கேள்விகளை காங்கிரஸ் எழுப்பியது. அயோத்தி ராமர் கோயில் பிராண பிரதிஷ்டை விழாவுக்கு அழைக்கப்பட்ட போதும் அதனை புறக்கணித்தது அக்கட்சி. தற்போது அவர்கள், இந்து மதத்தின் 'சக்தி'யை அழிப்போம் என வெளிப்படையாகவே பேசுகிறார்கள்.

கொள்ளையடிப்பதை நாம் தடுத்துவிட்டோம். எனவே, மோடிக்கு எதிரான அவர்களின் கோபம் உச்சத்தில் இருக்கிறது.

உத்தராகண்ட்டில் சாலை, ரயில், விமான இணைப்புகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ரிஷிகேஷ் - கரண் பிரயாக் இடையே ரயில் இணைப்பை ஏற்படுத்துவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. டெல்லிக்கும் டேராடூனுக்கும் இடையேயான தொலைவும் தற்போது குறைந்துவிட்டது.

ஆதி கைலாஷ், ஓம் பர்வத் ஆகிய இடங்களுக்கு விமான சேவை தொடங்கப்பட்டுள்ளது. கங்கோத்ரி, யமுனோத்ரி, பத்ரிநாத், கேதார்நாத் ஆகியவற்றை இணைக்கும் நோக்கில் 900 கிலோ மீட்டர் நீண்ட நெடுஞ்சாலை தற்போது அமைக்கப்பட்டு வருகிறது” எனத் தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் உத்தராகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x