Last Updated : 13 Apr, 2018 12:43 PM

 

Published : 13 Apr 2018 12:43 PM
Last Updated : 13 Apr 2018 12:43 PM

‘டெல்லி மிட்நைட் மார்ச்’: ராகுல் பேரணியில் செல்பிஎடுக்க முயன்றவர்களிடம் சீறிய பிரியங்கா

காஷ்மீர், உத்தரப்பிரதேச மாநிலங்களில் நடந்த பாலியல் பலாத்கார சம்பவங்களைக் கண்டித்து, டெல்லியில் நேற்று நள்ளிரவு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் பேரணி நடத்தப்பட்டது. அப்போது, செல்பி எடுக்க முயன்றவர்களிடம் பிரியங்கா கடுமையாகப் பேசினார்.

உத்தரப்பிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டத்தில் 18 வயது இளம்பெண்ணை பாஜக எம்எல்ஏ உள்ளிட்ட சிலர் கூட்டுப் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

அதேபோல, காஷ்மீர் மாநிலத்தில் கதுவா மாவட்டத்தில் கடந்த ஜனவரி 10-ம் தேதி ஆசிபா என்ற 8வயது சிறுமியை மர்மநபர்கள் சிலர் கடத்தி பலாத்காரம் செய்து கொலை செய்தனர். இந்த சம்பவத்துக்கும் நாடுமுழுவதும் கண்டனக் குரல்கள் எழுந்துள்ளன.

இந்நிலையில் இந்த இரு சம்பவங்களுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், மத்திய அரசுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் டெல்லியில் நேற்று நள்ளிரவு காங்கிரஸ் சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தி அமைதிப் பேரணி நடந்தது. காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் தொடங்கிய இந்த பேரணி டெல்லி இந்தியா கேட் வரையில் பேரணி நடந்தது.

காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தலைமையில், சோனியா காந்தி, பிரியங்கா , ராபர்ட் வத்ரா, அவரின் 15வயது மகள், காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத், கபில் சிபல் உள்ளிட்ட பல்வேறு மூத்த தலைவர்கள் கலந்து கொண்டனர்.

பெண்கள் பாலியல் பலாத்காரச் சம்பவங்களை கண்டுகொள்ளாமல் தூங்கிக் கொண்டிருக்கும் மத்திய பாஜக அரசை எழுப்புவதற்காக நள்ளிரவில் போராட்டம் நடத்துகிறோம் என்று காங்கிரஸ் கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டது.

டெல்லியில் இந்தியா கேட் பகுதியில் காங்கிரஸ் கட்சியினரும், ஆதரவாளர்களும் அமைதிப் பேரணியில் இருந்தனர். அப்போது, சிலர் பிரியங்காவுடனும் ராகுல் காந்தியுடனும் செல்பி எடுக்க சிலர் முயன்று சத்தமிட்டுக்கொண்டிருந்தனர். இதைக் கண்ட பிரியங்கா காந்தி கடும் கோபமடைந்து, செல்பி எடுக்க முயன்றவர்களையும், சத்தமிடுபவர்களையும் கடுமையாகச் சாடினார்.

பிரியங்கா கூட்டத்தினரைப் பார்த்துக் கூறுகையில், ‘நாம் எதற்காக இங்கு கூடி இருக்கிறோம், என்ன காரணத்துக்காக கூடி இருக்கிறோம் என்று ஒரு நிமிடம் நினைத்துப்பாருங்கள், இப்படி ஒருவர் மீது ஒருவர் இடித்துக்கொண்டும், சத்தமிட்டுகொண்டும் இருப்பவர்கள் தயவு செய்து வீட்டுக்குச் சென்றுவிடுங்கள். செல்பி எடுக்கும் நேரமா இது என்பது உணர்ந்து சிந்தியுங்கள். தயவு செய்து அனைவரும் அமைதியாக இருந்து, நடந்து வாருங்கள், எதற்காக இந்த பேரணி என்று உணர்ந்து செயல்படுங்கள்’ எனத் தெரிவித்தார்.

இதைப் பார்த்த சில ஊடகத்தினர் தங்களுக்கு பேட்டி கொடுங்கள் என்று பிரியங்காவிடம் கேட்டபோது, அவர்களிடமும் பிரியாங்கா கடுமையாக சீறினார்.

காங்கிரஸ் சார்பில் நடத்தப்பட்ட இந்த அமைதிப்பேரணியல் சிலர் மது அருந்திவிட்டு, சத்தமிட்டுக் கொண்டும், இடித்துக்கொண்டும் வந்தனர். இதனால், பெண் மத்தியில் ஒருவிதமான அசாதார சூழல் நிலைவியதையடுத்து, பிரியங்கா கடுமையாக நடந்து கொண்டார் என்று கூட்டத்தில் இருந்த காங்கிரஸ் தலைவர்கள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x