

லக்னோ: மக்களவை தேர்தலுக்காக 20 பக்க தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது சமாஜ்வாதி கட்சி. அதற்கு‘ஹமாரா அதிகார் (நமது உரிமை)’ என பெயரிடப்பட்டுள்ளது. இந்ததேர்தல் அறிக்கையை கட்சி தலைமையகத்தில் நேற்று வெளியிட்ட சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் கூறியதாவது:
இந்த ஆவணத்தில் அரசியல்சாசனத்தை காக்கும் உரிமை போன்ற முக்கிய கோரிக்கைள் உள்ளன. இவைகள்தான் வளர்ச்சி அடைந்த நாட்டுக்கு தேவை.
ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு இல்லாமல் ஒருங்கிணைந்த வளர்ச்சிக்கு வாய்ப்பில்லை. நாட்டின் வளர்ச்சிக்கு ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்புதான் அச்சாணி. இதில்தாமதம் கூடாது. 2025-ம் ஆண்டுக்குள் நாம் ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்துவோம். அதன் அடிப்படையில் நீதி மற்றும் அனைவரின் பங்களிப்பு 2029-க்குள் உறுதி செய்யப்படும்.
விவசாயிகளின் உற்பத்தி பொருட்களுக்கு சுவாமிநாதன் குழு பரிந்துரைப்படி குறைந்தபட்ச ஆதரவு விலை அளிக்கப்படும். துணை ராணுவப் படையினர் உட்பட அனைத்து பிரிவினருக்கும் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும். அக்னிப் பாதை திட்டம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டு, பாதுகாப்பு படைகளில் முறையான ஆள்சேர்ப்பு நடவடிக்கை தொடங்கப்படும். இவ்வாறுஅகிலேஷ் யாதவ் கூறினார்.