

கோசி நதியில் பயங்கர வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளதால் பிஹாரின் 4 மாவட்டங்களில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்ல பேரழிவு மேலாண்மைத் துறை உத்தரவிட்டுள்ளது.
வெள்ளம் ஏற்பட்டால் 10 மீட்டர் உயரம் வரை பிஹாரின் 4 மாவட்டங்களில் தண்ணீர் புகும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வடக்கு மாவட்டங்களில் அதிகபட்ச எச்சரிக்கையை பிஹார் அரசு அறிவித்துள்ளது. வெள்ளி இரவு போட்டே கோசியில் கடும் நிலச்சரிவுகள் ஏற்பட்டதையடுத்து இந்த உச்சபட்ச எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நிலச்சரிவினால் கோசி நதியில் நீர்நிலை அபாயகரமாக அதிகரித்து வருகிறது, காரணம் நதிநீர் அதன் பாதையில் போக வழியில்லை. இதனால் ஏற்பட்டுள்ள பெரும் அடைப்பை நேபாள் ராணுவம் உடைத்து விட முடிவு செய்துள்ளது.
இதனால் பிஹாரில் கோசியின் கிளை நதியில் பெரும் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது. 2008ஆம் ஆண்டு ஏற்பட்டது போல் கோசி நதி வெள்ளம் பேரும் சேதங்களை ஏற்படுத்தி விடும் என்ற அச்சம் தற்போது பிஹார் அரசுக்கு ஏற்பட்டுள்ளது.
2008ஆம் ஆண்டு குஷாஹாவில் கோசி நதியின் கரை உடைந்து ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு பிஹாரை நாசம் செய்தது. பலர் உயிரிழக்க சுமார் 30 லட்சம் பேர் வீடுகளை இழந்து தவித்தனர். 8 லட்சம் விளைநிலங்கள் சின்னாபின்னமானது.
இந்த அபாயம் தற்போது ஏற்பட்டுள்ளதால் நீராதாரத் துறை அதிகாரிகள் அனைவரையும் அழைத்து பிஹார் அரசு அவசரமாக ஆலோசித்து வருகிறது. சாதாரணமாக நேபாளிலிருந்து பாயும் கோசி நதி பிஹார் பகுதிக்கு வர 6 மணிநேரங்கள் ஆகும், ஆனால் இப்போது அங்கு கோசியின் ஒரு பகுதியில் நீர்நிலை அதிகரித்து வருவதால் உடைத்து விடும் முயற்சியில் நேபாள் ராணுவம் உள்ளது.
இதனால் பிஹார் கிளை நதிக்கு வரும் வெள்ள நீர் அதைவிடவும் குறைந்த நேரத்தில் வரும் என்பதால் பிஹார் அரசு அவசர ஆலோசனைகளில் ஈடுபட்டு வருகிறது.