Published : 13 Apr 2018 08:20 AM
Last Updated : 13 Apr 2018 08:20 AM

உத்தரபிரதேசத்தில் பாலியல் பலாத்கார புகாரை தொடர்ந்து பாஜக எம்எல்ஏ மீது வழக்கு பதிவு; கைது செய்ய பாதிக்கப்பட்ட பெண் வலியுறுத்தல்

உத்தரபிரதேசத்தில் பலாத்கார புகாரின் அடிப்படையில் ஆளும் பாஜகவைச் சேர்ந்த எம்எல்ஏ குல்தீப் சிங் செங்கர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

உத்தரபிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டத்தில் உள்ள பங்கர்மாவ் தொகுதி பாஜக எம்எல்ஏ குல்தீப் சிங் செங்கர். செங்கரும், அவரது சகோதரர் அனில் சிங்கும் தன்னை பலாத்காரம் செய்ததாக 17 வயது இளம்பெண் ஒருவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதனால் பெண்ணின் தந்தை பப்புவை குல்தீப் சிங்கும் அனில் சிங்கும் தாக்கியதாகத் தெரிகிறது. ஆனால் அங்கு வந்த போலீஸார், பப்புவை கைது செய்தனர்.

இந்நிலையில், சிறையில் அடைக்கப்பட்டிருந்த பப்பு கடந்த சில நாட்களுக்கு முன்பு மர்ம மான முறையில் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. எம்எல்ஏ குல்தீப்பை கைது செய்யக் கோரி மாநிலத்தின் பல்வேறு இடங்களில் போராட்டங்களும் நடைபெற்றன.

இந்தப் பின்னணியில், பலாத்கார வழக்கு தொடர்பாக, எம்எல்ஏ குல்தீப்பின் சகோதரர் அனில் சிங்கை போலீஸார் அண்மையில் கைது செய்தனர். எம்எல்ஏ குல்தீப் சிங் மீதும் போலீஸார் நேற்று வழக்கு பதிவு செய்தனர்.

சிபிஐக்கு மாற்றம்

பெண் அளித்த பலாத்கார புகார், அவரது தந்தை மர்ம மரணம் தொடர்பான வழக்கு சிபிஐ வசம் ஒப்படைக்கவுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து மாநில உள்துறைச் செயலர் அரவிந்த் குமார் கூறுகையில், “இவ்வழக்கு விசாரணை, சிபிஐ வசம் ஒப்படைக்கப்படவுள்ளது. இந்த வழக்கில் நேர்மையான விசாரணையை மாநில அரசு உறுதி செய்யும். குற்றவாளிகள் சட்டத்தின் பிடியிலிருந்து தப்ப முடியாது” என்றார்.

சித்தப்பாவுக்கு ஆபத்து

எம்எல்ஏ செங்கரால் தனது சித்தப்பாவின் உயிருக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக பலாத்கார புகார் தெரிவித்த இளம்பெண் கூறியுள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, “எம்எல்ஏ குல்தீப் சிங்கை போலீஸார் கைது செய்ய வேண்டும். இல்லையெனில், எனக்கு உறுதுணையாக இருக்கும் எனது சித்தப்பாவையும் அவர் கொலை செய்து விடுவார். எம்எல்ஏவை போலீஸார் காப்பாற்றி வருகின்றனர். எனக்கு நியாயம் கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

இதனிடையே, இவ்வழக்கில் எம்எல்ஏ குல்தீப் சிங் இன்னமும் கைது செய்யப்படாததற்கு உத்தரபிரதேச அரசுக்கு அலகாபாத் உயர்நீதிமன்றம் நேற்று கடும் கண்டனம் தெரிவித்தது. - பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x