

கடலூர்: ஜனநாயக குடியரசாக நம்நாடு நீடிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. எனவே, இந்த இந்த மக்களவைத் தேர்தல் மிகவும் முக்கியமானது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி யின் தேசிய செயலாளர் டி.ராஜா தெரிவித்துள்ளார்.
சிதம்பரத்தில் நேற்று அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: அகில இந்திய அளவில், இந்தமக்களவைத் தேர்தல் களம் பெரும்முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறியுள்ளது. கடந்த 10 ஆண்டு கால பாஜக ஆட்சியில் அரசியல் சட்டம், மதச்சார் பின்மை, மக்களுக்கு அரசு பணியாற்ற வேண்டியமக்கள் நல கொள்கை, கூட்டாட்சி நெறிமுறைகளை காப்பது உள்ளிட்ட அனைத்தும் கேள்விக் குறியாகியுள்ளது. இந்தியா, ஜனநாயக குடியரசாக நீடிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
அதனால் தான் இந்தத் தேர்தலை முக்கியமான தேர்தலாக அனைவரும் கருதுகிறோம். இந்தியாவை மதச்சார்பின்மை நாடு என்பதை மாற்றி, ஒரு குறிப்பிட்ட மதவாத நாடாக மாற்று வதுதான் ஆர்எஸ்எஸ்ஸின் நோக்கம். இதை நிறைவேற்றும் பிரத மராக மோடி செயல்படுகிறார். இண்டியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் அனைத்து கட்சிகளும் இணைந்து, நாட்டின் ஒன்றுபட்ட வளர்ச்சிக்காக, ஆர்எஸ்எஸ் கட்டுப் பாட்டில் உள்ள பாஜகவையும், மோடியையும் அதிகாரத்தில் இருந்து அகற்ற வேண்டும்.
வெள்ளம் உள்ளிட்ட பல இயற்கை பேரிடர்களை சந்தித்த போது மோடி தமிழ்நாட்டுக்கு வரவில்லை. தேர்தல் நேரத்தில் மட்டும் தமிழ்நாட்டுக்கு அடிக்கடி வருவதற்கு அவர் வெட்கப்பட வேண்டும். பேரிடர் காலத்தில், மாநில அரசுக்கு கொடுக்க வேண்டிய நிதியை கூட மோடி வழங்கவில்லை. டாக்டர் அம்பேத்கர், அரசியல் சட்டத்தை முன்வைத்த போது, ‘இந்தியா ஒரு மதவாத நாடாக மாறுவது கூடாது. இந்தியா ஒரு ஜனநாயக குடியரசாக தான் இருக்க வேண்டும்’ என்றார். மோடி ஆட்சியில் அவைகள் மதிக் கப்படவில்லை.
ஜிஎஸ்டி வரி விதிப்பில், மாநில அரசுகளுக்கு உரிய பங்கினை தர வேண்டும். ஆனால் உரியபங்கு வழங்க பிரதமர் தயாராக இல்லை. நாட்டின் வளர்ச்சியைப் பற்றி மோடி பேசுகிறார். அவர் பிரதமர் ஆவதற்கு முன்பு, இந்தியா பெற்ற அந்நிய கடன் எவ்வளவு? தற்போது இந்தியா பெற்றுள்ள அந்நிய கடன் எவ்வளவு? இதை பொதுவெளியில் விவாதிக்க தயாரா? மோடி ஆட்சி காலத்தில் அதானி, அம்பானி போன்ற கார்ப்பரேட் நிறுவனங்கள் தான் வளர்ச்சியடைந்துள்ளன.
தமிழ்நாட்டில் பாமக, பாஜகவோடு அணி சேர்ந்துள்ளது. ‘பாட்டாளி’ என்று சொல்லிக் கொண்டு பாஜகவோடு சேருவதுஎவ்வளவு பெரிய கொள்கை மோசடி, அதிமுகவின் பொதுச்செய லாளர் பழனிசாமி தலைமையில் உள்ள கட்சி, தமிழர்களின் உரிமை களை மீட்போம் என்கிறது. தமிழர்கள் உரிமை பறிக்கப்பட்ட போது இவர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள்?
சிதம்பரம் தொகுதியில் திருமாவளவன் போட்டியிடுகிறார். என்னைப் பொறுத்த வரை அவர் ஒரு எழுச்சி இந்தியர். அனைவருக்கும், அனைத்தும் கிடைக்க போராடுகின்ற முன்கள போராளிகளில் ஒருவர். அவரை பானை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும் என்றார்.
திருப்போரூர் எம்எல்ஏ எஸ்.எஸ்.பாலாஜி, இந்திய கம்யூ., கட்சி மாநில நிர்வாகக்குழு உறுப்பினர்கள் டாக்டர் சாந்தி, டாக்டர் ரவீந்திர நாத், மாநிலக் குழு உறுப்பினர் டி.மணிவாசகம், சேகர், மாவட்ட செயலாளர் துரை, நகர தலைவர் தமிமுன் அன்சாரி உள் ளிட்டோர் உடனிருந்தனர்.