Published : 16 Apr 2018 09:57 AM
Last Updated : 16 Apr 2018 09:57 AM

மக்களவை, சட்டப்பேரவைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் திட்டத்தை 2 கட்டமாக அமல்படுத்தலாமா? - தேர்தல் ஆணையத்திடம் கருத்து கேட்க மத்திய அரசு முடிவு

நாடாளுமன்ற மக்களவை மற்றும் அனைத்து மாநில சட்டப்பேரவைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் திட்டத்தை 2 கட்டமாக அமல்படுத்தலாமா என்பது குறித்து தேர்தல் ஆணையத்திடம் கருத்து கேட்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

மக்களவை மற்றும் அனைத்து மாநில சட்டப்பேரவைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி யோசனை கூறியிருந்தார்.

இதன்மூலம், அரசின் செலவு குறைவதுடன் தேர்தல் பிரச்சாரத்துக்காக அரசியல் கட்சிகள் செலவிடும் நேரம் குறையும் என்ற கருத்து நிலவுகிறது.

பிரதமரின் இந்த யோசனைக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் ‘நிதி ஆயோக்’ அமைப்பும் நாடாளுமன்ற நிலைக்குழுவும் தனது பரிந்துரையை அரசுக்கு வழங்கின. இந்தப் பரிந்துரை குறித்து கருத்து தெரிவிக்குமாறு தேர்தல் ஆணையத்தை மத்திய அரசு கேட்டுக் கொண்டது. இத்தகைய தேர்தல் சீர்திருத்தம் செய்வதற்கு அரசியல் சாசனம் மற்றும் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் சில திருத்தங்களை செய்ய வேண்டும் என்று தேர்தல் ஆணையம் கூறியிருந்தது.

இது தொடர்பான பரிந்துரையை வழங்குமாறு சட்ட ஆணையத்தை அரசு கேட்டுக் கொண்டது. சட்ட ஆணையம் இம்மாத இறுதியில் மத்திய அரசிடம் தனது அறிக்கையை தாக்கல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதில், ‘ஒரு நாடு, ஒரு தேர்தல்’ என்ற அரசின் திட்டத்துக்கு வடிவம் கொடுக்க சட்ட ஆணையம் தயாராக உள்ளதாகக் கூறப்படுகிறது.

மக்களவை மற்றும் அனைத்து மாநில சட்டப்பேரவைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தலாம் என்றும், இந்த திட்டத்தை 2019, 2024 என 2 கட்டங்களாக அமல்படுத்துவதற்கு வசதியாக சட்டத் திருத்தம் செய்யலாம் என்றும் சட்ட ஆணையம் பரிந்துரை செய்யும் எனத் தெரிகிறது.

அதாவது முதல் கட்டமாக, 2021-ல் முடியவுள்ள சட்டப்பேரவைகளின் பதவிக் காலத்தைக் குறைத்து 2019 மக்களவைத் தேர்தலுடன் தேர்தலை நடத்தவும், 2-வது கட்டமாக 2021-க்குப் பிறகு முடியவுள்ள சட்டப்பேரவைகளின் பதவிக் காலத்தை சிறிது காலம் நீட்டித்து, 2024 மக்களவைத் தேர்தலுடன் சேர்த்து தேர்தலை நடத்தவும் பரிந்துரை வழங்கும் எனத் தெரிகிறது. இந்தப் பரிந்துரை கிடைத்ததும் இதுகுறித்து தேர்தல் ஆணையத்திடம் கருத்து கேட்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x