Published : 10 Apr 2024 08:12 PM
Last Updated : 10 Apr 2024 08:12 PM

“காங்கிரஸால் ராமர் கோயில் கட்டியிருக்க முடியுமா?” - உ.பி. முதல்வர் யோகி

யோகி ஆதித்யநாத்

கதுவா: "உத்தரப் பிரதேசத்தில் இதற்கு முன்பு ஆட்சியில் இருந்த முந்தைய அரசுகள் அராஜகவாதிகளுக்கு ஆதரவு அளித்து வந்த நிலையில், எனது 7 ஆண்டுகால ஆட்சியில் மாநிலத்தில் கலவரமோ, ஊரடங்கு உத்தரவோ நிகழவில்லை" என்று அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

உத்தரப் பிரதேசத்தின் உதாம்பூர் - கதுவா மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் ஜித்தேந்திர சிங்கை ஆதரித்து முதல்வர் யோகி ஆதித்யநாத் புதன்கிழமை பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் கூறியதாவது: "மாநிலத்தில் இதற்கு முன்பு ஆட்சியில் இருந்த முந்தைய ஆட்சியாளர்கள் வன்முறையாளர்களுக்கு ஆதரவு அளித்தனர். அதனால் மாநிலத்தில் கலவரங்களும், ஊரடங்கு உத்தரவும் வழக்கமான விஷயமாக இருந்தது. என்னுடைய இந்த ஏழு ஆண்டு கால ஆட்சி காலத்தில் மாநிலத்தில் கலவரமோ, ஊரடங்கு உத்தரவோ எங்கும் இல்லை.

தற்போது வருடாந்திர கவாத் யாத்திரை சுதந்திரமான சூழலில் நடைபெறுகிறது. நாட்டிலேயே மத வழிபாட்டு தலங்களில் ஒலிப்பெருக்கிகளை அகற்றிய முதல் மாநிலம் உத்தரப் பிரதேசம்தான். மக்கள் அமைதியையும், வளர்ச்சியையும் விரும்புகிறார்கள். அயோத்தி, மதுரா, பிருந்தாவன் ஆகியவை நம்பிக்கை எவ்வாறு மதிக்கப்பட வேண்டும் என்பதற்கான உதாரணங்களாக உள்ளன.

உத்தரப் பிரதேசத்தில் மக்களிடம் ஒரு பாதுகாப்பு உணர்வு ஏற்பட்டுள்ளது. யாராவது தவறு செய்தால் அவர்கள் உடனடியாக தண்டிக்கப்படுகிறார்கள். முன்பு மக்கள் தங்களை இந்துக்கள் என்று அழைத்துக் கொள்ள தயக்கம் காட்டினர். அயோத்தியின் பெயரைச் சொல்ல பயந்தனர். கடந்த 2017-ம் ஆண்டு நான் முதல்வராக வந்தபோது, எனது அயோத்தி வருகையை கேள்வி எழுப்பினர். சில பிரிவினர் கோபப்படலாம் என்றும் என்னிடம் சொல்லப்பட்டது. ஆனால், நாங்கள் அங்கு திருவிழாக்கள் நடத்தினோம்.

ஒரு நல்லாட்சி அமைந்தால், 500 ஆண்டு கால காத்திருப்புகளும் முடிவுக்கு வரும். இன்று, அயோத்தியில் மிகப் பெரிய ராமர் கோயில் கட்டப்பட்டுள்ளது. காங்கிரஸால் இதைச் செய்திருக்க முடியுமா? காங்கிரஸ் கட்சி ராமர், கிருஷ்ணர் இல்லை என்று கூறி வருகிறது. தற்செயலான இந்துக்கள் ராமர், கிருஷ்ணரின் இருப்பை கேள்விக்குள்ளாகுகிறார்கள். இது நமது நம்பிக்கையை அவமதிக்கும் மிகப் பெரிய செயல். நம்முடைய தெய்வங்களை மறுப்பதன் மூலம் நமது நம்பிக்கையை அவர்கள் எவ்வாறு அவமதிக்கலாம்.

நாங்கள் நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்து நாட்டை வளர்ச்சியின் புதிய உச்சத்துக்கு கொண்டு சென்றுள்ளோம். வளர்ச்சி பணிகள் நடந்து கொண்டிருப்பதை நாடே அறியும். இந்தியா, உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதாரமாக உயர்ந்துள்ளது.

மூன்றாவது முறையாக போட்டியிடும் ஜிந்தேந்திர சிங்குக்கு ஆதரவாக வாக்களிப்பது மிகவும் முக்கியம். கடந்த 10 ஆண்டு கால வளர்ச்சி பணிகளின் அடிப்படையில், இந்தியாவை மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாற்ற மக்களின் ஆணையை வேண்டி நிற்கிறார் மோடி. இந்தியாவின் வளர்ச்சிக்கான பெருமை மோடியை சேரும். அவர் நவீன இந்தியாவின் சிற்பி. இந்த நேரத்தில் பாஜகவை தேர்வு செய்த நாட்டு மக்களுக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்" என்று யோகி ஆதித்யநாத் பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x