Last Updated : 10 Apr, 2024 11:37 AM

 

Published : 10 Apr 2024 11:37 AM
Last Updated : 10 Apr 2024 11:37 AM

செருப்பு மாலையுடன் பிரச்சாரம்; பிரதான கட்சிகள் வேட்பாளர் பட்டியல் பின்னணி - அலிகார் தொகுதி சுவாரஸ்யங்கள்

செருப்பு மாலையுடன் பிரச்சாரம் செய்யும் வேட்பாளர் கேசவ் தேவ்

புதுடெல்லி: உத்தரப்பிரதேசம் அலிகர் தொகுதி தேர்தல் கள நிலவரம் பல்வேறு சுவாரஸ்யங்களைக் கொண்டு கவனம் ஈர்த்துள்ளது. ஒருபுறம் செருப்பு மாலை அணிந்து ஒரு வேட்பாளர் தேர்தல் பிரச்சாரம் செய்கிறார் என்றால் மறுபுறம் பிரதான கட்சிகளில் முதன்முறையாக முஸ்லிம் வேட்பாளர் நிறுத்தப்படவில்லை.

பூட்டுக்கும், கல்வி மற்றும் மதக்கலவரங்களுக்கும் பெயர்போன நகரம் அலிகர். இங்கு இந்துக்களும், முஸ்லிம்களும் சரிபாதியாக வாழ்கின்றனர். கடந்த 1991 முதல் பாஜகவின் கோட்டையாக இருக்கும் அலிகரில் 2004, 2009 இல் காங்கிரஸ் வேட்பாளரான சவுத்ரி விஜயேந்தர்சிங் வெற்றி பெற்றிருந்தார். மீண்டும் 2014 முதல் பாஜகவுக்கே வெற்றி கிடைத்து வருகிறது. இதன் பின்னணியில் சமாஜ்வாதி மற்றும் பகுஜன் சமாஜ் (பிஎஸ்பி) கட்சிகளில் நிறுத்தப்படும் முஸ்லிம் வேட்பாளர்கள் உள்ளனர். இவர்களால் முஸ்லிம் வாக்குகள் பிரிந்து பாஜகவுக்கு வெற்றி கிடைத்து விடுகிறது.

இந்தமுறை, சமாஜ்வாதியுடன் கூட்டணி வைத்துள்ள காங்கிரஸுக்கு அலிகர் ஒதுக்கப்பட்டுள்ளது. இக்கட்சியின் வேட்பாளராக இரண்டு முறை எம்.பி.,யான ஜாட் சமூகத்தின் சவுத்ரி விஜயேந்தர் போட்டியிடுகிறார். இதேபோல், பாஜகவிலும் இரண்டுமுறை எம்.பி.,யான சதீஷ் கவுதம் தொடர்ந்து மூன்றாவது முறையாகப் போட்டியில் உள்ளார். மாயாவதியின் பிஎஸ்பியில் பண்டி உபாத்யா எனும் ஹிதேந்தர் குமார் போட்டியிடுகிறார்.

இதனால், மும்முனைப் போட்டி உருவாகி உள்ளது. சமாஜ்வாதியுடன் முஸ்லிம் வாக்குகளும் பிரியாமல் காங்கிரஸுக்கு செல்லும் வாய்ப்புகள் உள்ளன. பிஎஸ்பி, பாஜகவிலும் பிராமணர் வேட்பாளர்களின் வாக்குகளும் காங்கிரஸுக்கு சாதகமாகப் பிரிகின்றன. ஜாட் வாக்குகள் அதிகம் இருந்தாலும் அச்சமூகக் கட்சியான ராஷ்டிரிய லோக் தளம் இம்முறை பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளது. மொத்தம் 14 வேட்பாளர்கள் போட்டியில், பிரதான கட்சிகள் முதன்முறையாக முஸ்லிம் வேட்பாளர்களைக் களமிறக்கவில்லை.

14 வேட்பாளர்களில் கேசவ் தேவ் என்பவர் சுயேச்சையாகப் போட்டியிடுகிறார். இவர், தம் கழுத்தில் செருப்புகளால் கோர்க்கப்பட்ட மாலையுடன் தேர்தல் பிரச்சாரம் செய்கிறார். இத்துடன் மலர் மாலையும் அணிந்து கேசவ் செய்யும் பிரச்சாரம் வியப்பை ஏற்படுத்துகிறது.

கேசவின் சுயேச்சை சின்னமாக தலைமைத் தேர்தல் ஆணையம் செருப்புச் சின்னத்தை ஒதுக்கியுள்ளது. இந்த செருப்பை கையால் எடுத்துக்கொண்டு பிரச்சாரம் செய்தாலும் சிக்கலாகும். எனவே, செருப்பு மாலையை கழுத்தில் அணிய வேண்டிய நிலை என கேசவ் நொந்து கொள்கிறார். உபியின் ஏழு கட்ட தேர்தலில் அலிகரில் ஏப்ரல் 26 இல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x