Published : 10 Apr 2024 11:02 AM
Last Updated : 10 Apr 2024 11:02 AM

“10 ஆண்டுகளாக மதுரா தான் எனது தாய் வீடு” - நடிகை ஹேமமாலினி விளக்கம்

தமிழகத்தைச் சேர்ந்தவர் நடிகை ஹேமமாலினி. சிறுவயதிலேயே மும்பையில் குடியேறி பாலிவுட்டில் மிகப்பெரிய நடிகையாக வளர்ந்தார். 2014 தேர்தலில் மதுரா தொகுதியில் பாஜக வேட்பாளராக வெற்றி பெற்று எம்.பி.யும் ஆனார். 2019-லும் அதே தொகுதியில் போட்டியிட்டு வெற்றி கண்டார். தற்போது, தொடர்ந்து 3-வது முறையாக மதுரா தொகுதியில் பாஜக சார்பில் அவர் களமிறக்கப்பட்டுள்ளார்.

75 வயது ஆனவர்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிப்பது இல்லை என்ற பாஜக மேலிடத்தின் எழுதப்படாத விதியை தளர்த்தி, 75 வயதான ஹேமமாலினிக்கு பாஜக மீண்டும் வாய்ப்பு அளித்துள்ளது. இந்நிலையில் ஹேமமாலினி வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர் என்ற பிரச்சாரத்தை காங்கிரஸ், ராஷ்டிரிய லோக் தள கட்சி உள்ளிட்ட கட்சிகள் கையில் எடுத்துள்ளது.

இதுகுறித்து நடிகை ஹேமமாலினி கூறியதாவது: நான் கடந்த 10 ஆண்டுகளாக மதுரா தொகுதியின் எம்.பி.யாக இருக்கிறேன். எனவே, நான் வெளிமாநிலத்தைச் சேர்ந்தவள் கிடையாது. இது எனக்கு இன்னொரு தாய்வீடு போன்றது. மும்பையிலிருந்து மதுராவுக்கு 8 மணி நேர பயணம்தான். நான் அடிக்கடி அங்கிருந்து இந்த நகருக்கு வந்து செல்கிறேன்.

நான் கடவுள் கிருஷ்ணரின் தீவிர பக்தை. நான் இங்கு செய்த பணிகளுக்காக பெருமைப்படுகிறேன். அவை கடவுள் கிருஷ்ணரின் பக்தர்களுக்காக நான் செய்த பணிகளாகும். நான் இந்தப் பகுதியைச் சேர்ந்தவள்தான்.

ஒருவேளை, நீங்கள் என்னை வெளிமாநிலத்தைச் சேர்ந்தவள் என்று கருதினால், வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் இங்கு நல்ல முறையில் பணியாற்றுவார்கள், நல்ல திட்டங்களைக் கொண்டு வருவார்கள் என்று நான் கூறுவேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x