அமலாக்கத்துறை விசாரணைக்கு சற்று முன்னர் தானே ஆடி, பாடிய காணொலியை வெளியிட்டார் காங். எம்எல்ஏ

தனது வீடியோ பாடலில் ஆடி, பாடும் அம்பா பிரசாத்.
தனது வீடியோ பாடலில் ஆடி, பாடும் அம்பா பிரசாத்.
Updated on
1 min read

ராஞ்சி: பணமோசடி வழக்கில் அமலாக் கத்துறையின் விசாரணைக்குச் சற்று முன்னர் தானே ஆடி, பாடிய காணொலியை ஜார்க்கண்ட் மாநில காங்கிரஸ் எம்எல்ஏ அம்பா பிரசாத் வெளியிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கடந்த 2019-ம் ஆண்டு ஜார்க்கண்ட் சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்ற இளம் வேட்பாளர் அம்பா பிரசாத். ஐஏஎஸ் கனவுகளை உதறித் தள்ளிவிட்டு அரசியலுக்கு வந்தவர். பார்காகோ தொகுதியில் காங்கிரஸ் கட்சி எம்எல்ஏ-வாக பதவி வகித்து வருகிறார்.

இந்நிலையில், மிரட்டி பணம் பறித்தல், மணல் கடத்தல், நிலஅபகரிப்பு உள்ளிட்ட குற்றச்சாட்டில் சிக்கியுள்ளார் அம்பா பிரசாத். அவரது வீடு உள்ளிட்ட அவருக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத் துறை கடந்த மாதம் நடத்திய சோதனையில் ரூ. 35 லட்சம் மதிப்பிலான கணக்கில் வராத பணம், டிஜிட்டல் சாதனங்கள், போலி முத்திரைகள், கையால் எழுதப்பட்ட ரசீதுகள் உள்ளிட்ட ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.

இதனிடையில், அம்பா பிரசாதிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று மீண்டும் விசாரணை நடத்தினர். அதற்கு செல்வதற்கு சற்று முன்பு ஜார்க்கண்ட் மாநில புத்தாண்டு திருவிழா கொண்டாட்டத்தை ஒட்டி தானே ஆடி, பாடி பதிவு செய்த ’ஜியா ஹர்ஷயே’ என்ற வீடியோ பாடலை அம்பா பிரசாத் வெளியிட்டார். 6 மணிநேர தொடர் விசாரணைக்கு பிறகான செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறியதாவது:

புத்தாண்டை கொண்டாட... குழந்தை பருவத்திலிருந்தே எனக்கு இசை, நடனம் என்றால் கொள்ளை பிரியம். ஆகவேதான் நமது ஜார்க்கண்ட் மாநிலத்தின் புத்தாண்டைச் சிறப்பாக கொண்டாட சிறிய முயற்சி எடுத்து வீடியோ பாடல் வெளியிட்டேன். ஒரு மணி நேரத்துக்குள் பாடி முடித்துவிட்டேன். வீடியோ படம் எடுக்கத்தான் 6 மணி நேரம் ஆனது. இசை மன அழுத்தத்தைக் குறைக்கும் என்பது அறிவியல் உண்மை. மற்றபடி அமலாக்கத் துறை சம்மன், விசாரணை போன்ற சவால்கள் எனக்குப் புதிதல்ல. உண்மை இறுதியில் வெல்லும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in