

புதுடெல்லி: மதுபான கொள்கை ஊழல் வழக்கில் முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலை கைது செய்தது செல்லும். இந்த நடவடிக்கை சட்டப்பூர்வமானது என்று டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
மதுபான கொள்கை ஊழல் வழக்கில் டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலை அமலாக்கத் துறை கடந்த மார்ச் 21-ம் தேதி கைது செய்தது. தற்போது அவர் டெல்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கைது நடவடிக்கையை எதிர்த்து அவரது தரப்பில் கடந்த மார்ச் 23-ம் தேதி டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதுகுறித்து உயர் நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை கடந்த 2-ம் தேதி எழுத்துப்பூர்வமாக விரிவான விளக்கம் அளித்தது. 3-ம் தேதி வழக்கு விசாரணை நடந்தது.
கேஜ்ரிவால் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி, ‘‘மக்களவை தேர்தல் நேரத்தில் உள்நோக்கத்துடன் கேஜ்ரிவால் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீதான குற்றச்சாட்டுக்கு எந்த ஆதாரமும் கிடையாது. அவரை கைது செய்தது சட்டவிரோதம்’’ என்று வாதிட்டார்.
அமலாக்கத் துறை சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ராஜு, ‘‘மதுபான கொள்கை ஊழல் மூலம் திரட்டிய தொகையை கோவா தேர்தலில் ஆம் ஆத்மி பயன்படுத்தி உள்ளது. இதற்கான ஆதாரங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளோம். இதுதொடர்பான வாட்ஸ்அப் உரையாடல்கள், வருமான வரித் துறை தகவல்கள், ஹவாலா புரோக்கர்களின் வாக்குமூலங்களையும் அளித்துள்ளோம். மதுபான கொள்கை ஊழல் வழக்கில் நேரடி தொடர்பு இருப்பதால்தான் கேஜ்ரிவால் கைது செய்யப்பட்டுள்ளார்’’ என்று தெரிவித்தார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட உயர் நீதிமன்றம், தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை தள்ளிவைத்தது. இந்நிலையில், நீதிபதி ஸ்வர்ண காந்தா சர்மா நேற்று தீர்ப்பு வழங்கினார். அதில் கூறியிருப்பதாவது:
ஹவாலா புரோக்கர்கள், கோவா தேர்தலில் போட்டியிட்ட ஆம் ஆத்மி வேட்பாளர்கள், வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள சரத் ரெட்டி, ராகவ் முங்தா ஆகியோரது வாக்குமூலங்களை அமலாக்கத் துறை சமர்ப்பித்துள்ளது.
மதுபான கொள்கை வழக்கு என்பது சட்டவிரோதமான வழக்கு அல்ல. இந்த வழக்கில் சட்டப்பூர்வ நடைமுறைகள் முழுமையாக பின்பற்றப்பட்டுள்ளன. எனவே, கேஜ்ரிவாலை கைது செய்தது செல்லும். தேர்தல் நேரத்தில் கைது செய்ததாக வாதிடுவதை ஏற்க முடியாது. அவருக்கு எதிராக போதுமான ஆதாரங்கள் உள்ளன. எனவே, கேஜ்ரிவால் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.
காணொலி மூலம் விசாரணை நடத்த வேண்டும் என்ற அவரது கோரிக்கை நிராகரிக்கப்படுகிறது. அமலாக்கத் துறை எவ்வாறு விசாரணை நடத்த வேண்டும் என்பதை, குற்றம் சாட்டப்பட்டவர் தீர்மானிக்க முடியாது. முதல்வர் என்பதற்காக சிறப்பு சலுகை வழங்க முடியாது.
இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
இந்த தீர்ப்பை எதிர்த்து கேஜ்ரிவால் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட உள்ளது.