Published : 11 Apr 2018 06:21 PM
Last Updated : 11 Apr 2018 06:21 PM

ஆதார் இணைப்பு மக்களைக் குற்றவாளிகளாகப் பார்ப்பதாக அர்த்தமாகாது: உச்ச நீதிமன்றத்தில் ஆதார் ஆணையம் வாதம்

ஆதார் இணைப்பை நாங்கள் வலியுறுத்துவது மக்களைக் குற்றவாளிகளாகப் பார்க்க அல்ல, மாறாக குற்றங்களிலிருந்து அவர்களைப் பாதுகாக்கவே என்று ஆதார் ஆணையம் (UIDAI) உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

அனைத்துக்கும் ஆதார் என்ற வலியுறுத்தல் ஒட்டுமொத்த மக்களையும் குற்றவாளிகளாகப் பார்ப்பதன் விளைவு என்று அனைத்திர்கும் ஆதார் இணைப்பை வலியுறுத்துவதை எதிர்த்து மனுதாரர்கள் குற்றம்சாட்ட, இன்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அரசியல் சாசன அமர்வின் முன் ஆதார் ஆணையம் தன் தரப்பு வாதங்களை முன்வைத்தது.

அதாவது ஒட்டுமொத்த மக்களும் நிதி மோசடிகள், தீவிரவாதம், வரி ஏய்ப்பு ஆகியவற்றில் ஈடுபடுவர்கள் என்று அரசு சந்தேகிக்கிறதோ என்ற உணர்வையே மக்களிடையே ஆதார் திட்டம் ஏற்படுத்துவதாக மனுதாரர்கள் சார்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.

“விமானத்தில் பயணிக்கிறோம் என்றால் எல்லா பயணிகளையும்தான் சோதிக்கிறார்கள். அதற்காக பயணிகள் அனைவரும் விமானக் கடத்தல்காரர்கள் என்று அர்த்தமாகாது. மாறாக விமானக்கடத்தலில் இருந்து நம்மைக் காக்கும் சோதனைகளே அவை” அரசு வழக்கறிஞர் துஷார் மேத்தா ஆதார் ஆணையம் சார்பாக வாதத்தை வைத்தார்.

இதற்கு நீதிபதி சிக்ரி, “விமானத்தில் பயணிக்கத் தேர்ந்தெடுப்பவர்களுக்குத்தானே சோதனை” என்று துஷார் மேத்தாவுக்கு ‘கவுண்ட்டர்’ கொடுத்தார்.

மேலும் நீதிபதி ஏ.கே.சிக்ரி கூறும்போது, “விமானப்பயணிகள் சோதனையிடப்படுவதையும், ஆதார் சூழலையும் ஒப்பிட முடியாது, 128 கோடி மக்கள் தங்கள் மொபைல், வங்கிக் கணக்குகள், பான் கார்டுகள் ஆகியவற்றுடன் ஆதாரை இணைத்தேயாக வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறார்கள்” என்று எதிருரை பகர்ந்தார்.

துஷார் மேத்தா இதற்குப் பதில் கூறும்போது, “ஒரு அளவுகோல் சீராக அனைவருக்கும் பயன்படுத்தும் போது ஒவ்வொருவரும் குற்றவாளிகள் என்று அர்த்தமாகாது. நிர்வாக நடவடிக்கை அளவுகோல்கள் தனிப்பட்ட சந்தேகம் என்ற பொருளைக் கொடுக்கும். அதற்காக ஒவ்வொருவரும் குற்றவாளிகள் என்று அர்த்தமல்ல” என்றார்.

நீதிபடி சந்திராசூட் கூறும்போது, ஒட்டுமொத்த மக்கள்தொகையையும் ஆதார் இணைப்பின் மூலம் கொண்டு வருவதன் மூலம் அரசு தலையீட்டின் விகிதாச்சாரம் பெரிய அளவில் உள்ளது என்றும் தீவிரவாதம், தேசியப் பாதுகாப்பு ஆகிய பெரிய, முக்கிய விவகாரங்களில் இந்த விகிதாச்சாரத்தை நியாயப்படுத்த முடியும், ஆனால் வரி ஏய்ப்பு என்ற சந்தேகத்தின் அடிப்படையில் மக்களின் அந்தரங்கத்தில் ஊடுருவலாமா என்று கேள்வி எழுப்பினார்.

இதற்குத் துஷார் மேத்தா, ”ஒட்டுமொத்த மக்கள் தொகையின் அந்தரங்கத்தில் ஊடுருவது பற்றிய கோர்ட்டார் அவர்களின் கவலைகள் சரிதான். ஆனால் வரி ஏய்ப்பு என்பது ரூ.33,000 கோடியாக இருக்கும் போது அது ஒரு பிரச்சினைக்குரிய விவகாரம் இதனை ஆதார் இணைப்புகள் ஒழிக்கும்” என்றார்.

மேலும் மக்களை வரி ஏய்ப்பாளர்களாகவும் நிதி மோசடி செய்பவர்களாகவும் பார்ப்பது பற்றிய விமர்சனங்கள் பற்றி அரசு உணர்வுபூர்வமாகவே உள்ளது, ஆனால் ஒரு ஷேமநல அரசாக ஊழல், நிதிமோசடி, கருப்புப் பணம், ஆகியவை பற்றி பொதுமக்களுக்கு இருக்கும் கவலைகளையும் நாம் பரிசீலிக்க வேண்டும் என்று அரசு வழக்கறிஞர் துஷார் மேத்தா மேலும் தெரிவித்தார்.

ஆதாரை பான் எண்ணுடன் இணைப்பது பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் உள்ள இடைவெளியைக் குறைக்கும் வழிதான் என்றார் துஷார் மேத்தா.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x