Published : 09 Apr 2024 03:43 PM
Last Updated : 09 Apr 2024 03:43 PM

அயோத்தி கோயில் திறப்பு விழாவை புறக்கணித்து ராமரை அவமதித்தது காங்கிரஸ்: பிரதமர் மோடி

லக்னோ: அயோத்தியில் பிரான பிரதிஷ்டை விழாவுக்கான அழைப்பை மறுத்ததன் மூலம் ராமரை காங்கிரஸ் அவமதித்ததாக பிரதமர் நரேந்திர மோடி குற்றம் சாட்டியுள்ளார்.

உத்தரப் பிரதேசத்தின் பிலிபித் தொகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய நரேந்திர மோடி, “அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்படாமல் இருக்க காங்கிரஸ் பல முயற்சிகளை மேற்கொண்டது. ஆனால், நாட்டு மக்கள் கொடுத்த ஒவ்வொரு பணத்தைக் கொண்டும் இவ்வளவு அழகான கோயில் உருவாக்கப்பட்டுள்ளது. உங்கள் (காங்கிரஸ்) பாவங்களை மக்கள் மன்னித்து, உங்களை பிரான பிரதிஷ்டை விழாவுக்கு அழைத்தபோது, அந்த அழைப்பை நீங்கள் (காங்கிரஸ்) நிராகரித்தீர்கள். இதன் மூலம் நீங்கள் (காங்கிரஸ்) ராமரை அவமதித்தீர்கள். அதோடு, பிரான பிரதிஷ்டை விழாவில் கலந்துகொண்ட காங்கிரஸ் தலைவர்களை கட்சியில் இருந்து 6 ஆண்டுகளுக்கு நீக்கினீர்கள்.

நாட்டின் ஒவ்வொரு குடும்பமும் அவர்களின் பக்திக்கு ஏற்ப அயோத்தி ராமர் கோயிலுக்கு பங்களித்தது. பிலிபித் மக்களும் அயோத்திக்கு ஒரு பெரிய புல்லாங்குழலை பரிசாக அளித்தனர். ஆனால், இண்டியா கூட்டணியைச் சேர்ந்தவர்கள், ராமர் கோயில் கட்டுவதற்கு முன்பே வெறுப்புடன் இருந்தனர். தற்போதும்கூட அவர்கள் வெறுப்புடன்தான் இருக்கிறார்கள்.

உத்தரப் பிரதேச முன்னாள் முதல்வர் கல்யாண் சிங், ராமர் கோயிலுக்காக தனது வாழ்க்கையையும் அரசாங்கத்தையும் அர்ப்பணித்தார்.

திருப்திப்படுத்தும் அரசியல் எனும் புதைக்குழியில் மூழ்கிவிட்டதால் காங்கிரஸ் கட்சியால் இனி அதிலிருந்து வெளியேறவே முடியாது. மக்களவைத் தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் தயாரித்துள்ள தேர்தல் அறிக்கை காங்கிரஸின் தேர்தல் அறிக்கை என்பதைவிட, முஸ்லிம் லீக்கின் தேர்தல் அறிக்கை போன்றுதான் உள்ளது.

வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்கும் இலக்கை நோக்கி எனது அரசு செயல்பட்டு வருகிறது. தற்போது உலகம் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருகிறது. எனினும், சாதிக்க முடியாதது எதுவுமில்லை என்பதை இந்தியா காட்டி வருகிறது. மக்களின் ஒவ்வொரு வாக்குகளாலும் இது சாத்தியமானது.

இலக்கு எவ்வளவு கடினமானதாக இருந்தாலும், அதை அடைவதில் இந்தியா உறுதியாக இருந்தால், அது நிச்சயம் சாதிக்கும். இன்று, புதிய உத்வேகத்துடனும், ஆற்றலுடனும், வளர்ந்த இந்தியா என்ற தீர்மானத்தை நோக்கிச் செயல்படுகிறோம்.

உலகத்திடம் இந்தியா உதவி கேட்கும் காலம் இருந்தது. ஆனால் கோவிட் தொற்றுநோய்களின்போது, இந்தியாவிலிருந்து உலகம் முழுவதற்கும் மருந்துகள் கிடைக்கப்பெற்றன. நாடு வலுப்பெறும் போது, இந்தியா சொல்வதை உலகம் கேட்கிறது” என்று பிரதமர் மோடி கூறினார்.

இதனிடையே, “அவர்கள் ராமரை வியாபாரம் செய்பவர்கள், நாங்களோ ராமரை பூஜிப்பவர்கள்” என்று பாஜகவை காங்கிரஸ் செய்தித் தொடர்பு பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கடுமையாக தாக்கி உள்ளார். அதன் விவரம்: “அவர்கள் ராமரை வியாபாரம் செய்பவர்கள்” - பாஜக மீது காங்கிரஸ் கடும் தாக்கு

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x