

ஜம்மு காஷ்மீரில் பாஜக, காங்கிரஸ், தேசிய மாநாடு, மக்கள் ஜனநாயக கட்சி ஆகியவை பிரதான கட்சிகளாக உள்ளன. இதில் காங்கிரஸ், தேசிய மாநாடு, மக்கள் ஜனநாயக கட்சி ஆகியவை இண்டியா கூட்டணியில் உள்ளன. இந்த சூழலில் ஜம்மு காஷ்மீரின் 5 மக்களவைத் தொகுதி, லடாக்கின் ஒரு மக்களவைத் தொகுதி தொடர்பாக காங்கிரஸ், தேசிய மாநாடு கட்சி இடையே பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. இதில் உடன்பாடு எட்டப்பட்டு, இரு கட்சிகளும் தலா 3 தொகுதிகளில் போட்டியிட முடிவு செய்துள்ளன.
இதுகுறித்து தேசிய மாநாடு கட்சி துணைத் தலைவர் ஓமர் அப்துல்லா டெல்லியில் நேற்று கூறும்போது, அனந்தநாக், பாரமுல்லா, நகர் தொகுதிகளில் தேசிய மாநாடு கட்சி போட்டியிடும். உதம்பூர், ஜம்மு, லடாக் தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிடும் என்று தெரிவித்தார்.
இண்டியா கூட்டணியில் இடம்பெற்றிருக்கும் மக்கள் ஜனநாயக கட்சிக்கு தொகுதிகள் ஒதுக்கப்படாதது குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் சல்மான் குர்ஷித்திடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் கூறும்போது, ஜம்மு-காஷ்மீர் மிகச் சிறிய பகுதி.
மக்கள் ஜனநாயக கட்சி உடனான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. எனினும் அந்த கட்சி இண்டியா கூட்டணியில் நீடிக்கிறது என்று தெரிவித்தார். தற்போதைய சூழலில் ஜம்மு காஷ்மீர் மக்களவைத் தேர்தலில் பாஜக, காங்கிரஸ்-தேசிய மாநாடு கூட்டணி, மக்கள் ஜனநாயக கட்சி இடையே மும்முனை போட்டி நிலவுகிறது.