

ஹைதராபாத்: டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில், தெலங்கானா மாநில முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவ் மகள் கவிதாவுக்கு இடைக்கால ஜாமீன் வழங்க நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
டெல்லியில் ஆட்சி நடத்தும் ஆம் ஆத்மி அரசு கடந்த 2021 நவம்பரில் புதிய மதுபான கொள்கையை அமல்படுத்தியது. இது தனியார் நிறுவனங்களுக்கு சாதகமாக அமைந்துள்ளதாகவும், இதன்மூலம் பல கோடி ரூபாய் மோசடி நடந்துள்ளதாகவும் புகார் எழுந்தது. இதுதொடர்பாக சிபிஐ, அமலாக்கத் துறை ஆகிய 2 புலனாய்வு அமைப்புகளும் தனித்தனியே வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன.
இந்த வழக்கில், டெல்லி துணை முதல்வராக இருந்த மணீஷ் சிசோடியா ஏற்கெனவே கைது செய்யப்பட்ட நிலையில், முதல்வர் அர்விந்த்கேஜ்ரிவாலும் கைது செய்யப்பட்டு, திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இதற்கிடையே, இந்த வழக்கில் தொடர்பு உடையதாக, தெலங்கானா மேலவை உறுப்பினர் கவிதாவை, கடந்த மார்ச் மாதம் 15-ம் தேதி, ஹைதராபாத்தில் அவரது வீட்டில் அமலாக்கத் துறை அதிகாரிகள் கைது செய்தனர். பின்னர் அவரை டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
இதைத் தொடர்ந்து, அவரை அமலாக்கத் துறையினர் 10 நாட்கள் வரை காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். தற்போது அவர் திஹார் சிறையில் வரும் 26-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், தனது மகனுக்கு தேர்வு இருப்பதால், உடன் இருக்க வேண்டுமென கோரி, கவிதா தரப்பில், வரும் 16-ம் தேதி வரை இடைக்கால ஜாமீன் வழங்கும்படி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இம்மனு நேற்று விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டது. விசாரணையின்போது இரு தரப்பினரும் வாதாடினர். கவிதாவுக்கு ஜாமீன் வழங்கினால், சாட்சிகளை மிரட்டுவார் என்றும், அவர் ஏற்கெனவே சாட்சிகளை மிரட்டி உள்ளார் என்பதால் ஜாமீன் வழங்க கூடாது என்றும் அமலாக்கத் துறை சார்பில் வாதாடப்பட்டது. இதை ஏற்ற நீதிமன்றம், அவருக்கு இடைக்கால ஜாமீன் தர மறுத்துவிட்டது. மேலும், ஜாமீன் குறித்த மனு மீது இம்மாதம் 20-ம் தேதி விசாரணை நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.