

புதுடெல்லி: நாட்டின் வளர்ச்சி குறித்து மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகருடன் நேருக்கு நேர் விவாதிக்க தயாராக இருப்பதாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சசி தரூர் தெரிவித்துள்ளார்.
கேரளாவின் திருவனந்தபுரம் மக்களவை தொகுதியில் பாஜக சார்பில் மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் சசி தரூர் களம் காண்கிறார்
இந்த நிலையில், திருவனந்தபுரத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது ராஜீவ் சந்திரசேகர் பேசிய வீடியோவை பகிர்ந்து சசி தரூர் கூறியுள்ளதாவது:
தேர்தல் பிரச்சாரத்தின் போது வளர்ச்சி மற்றும் சிறப்பான செயல்பாடுகள் குறித்து ராஜீவ் சந்திரசேகர் வெளிப்படையான விவாதத்துக்கு தயாரா என எனக்கு சவால் விடுத்துள்ளார். அவருடைய சவாலை ஏற்று நேருக்கு நேர் விவாதத்துக்கு தயாராக உள்ளேன். ஆனால், இந்த விவாதத்திலிருந்து நழுவி தப்பித்துக்கொண்டிருப்பது யார் என்பதை திருவனந்தபுரம் மக்கள் நன்கு அறிவர்.
10 ஆண்டு ஆட்சி: அரசியல் மற்றும் நாட்டின் வளர்ச்சி குறித்து விரிவாக இருவரும் விவாதிப்போம். கடந்த 10 ஆண்டு ஆட்சிக் காலத்தில், விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம், ஊழல், வகுப்புவாதம், வெறுப்பு அரசியலை பரப்பும் பாஜகவின் கொள்கைகள் குறித்து இருவரும் வெளிப்படையாக பேசுவோம்.
அதேநேரம், திருவனந்தபுரம் கடந்த 15 ஆண்டுகளில் அடைந்த வளர்ச்சி மற்றும் முன்னேற்றம் குறித்தும் விவாதிப்போம். சவாலுக்கு தயார்.
இவ்வாறு சசி தரூர் தெரிவித்துள்ளார்.
திருவனந்தபுரத்தில் ஒருவரை ஒருவர் எதிர்த்து போட்டியிடும் சூழலில் இரண்டு தலைவர்களும் நேரடி விவாதத்துக்கு மாறிமாறி அழைப்பு விடுத்துள்ளது கேரள அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவனந்தபுரம் தொகுதியில் 2009,2014 மற்றும் 2019-ம் ஆண்டு நடைபெற்ற மூன்று மக்களவை தேர்தல்களிலும் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட சசி தரூர் வெற்றி பெற்றுள்ளார். தொடர்ந்து நான்காவது முறையாக சசி தரூர் இந்த மக்களவை தேர்தலிலும் வெற்றி பெறுவார் என்பதே பலரின் கணிப்பாக உள்ளது.
திருவனந்தபுரத்தில் மீண்டும் போட்டியிடும் சசி தரூர் தாக்கல் செய்த வேட்புமனுவில் தனக்கு ரூ.55 கோடிக்கு மேல் சொத்து இருப்பதாக தெரிவித்துள்ளார்.
அவரை எதிர்த்து பாஜக சார்பில் போட்டியிடும் ராஜீவ் சந்திரசேகர் தனக்கு ரூ.28 கோடி சொத்து இருப்பதாக கூறியுள்ளார்.
கேரளாவில் மொத்தம் உள்ள 20 தொகுதிகளுக்கும் ஏப்ரல் 26-ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது.