Published : 13 Apr 2018 08:15 AM
Last Updated : 13 Apr 2018 08:15 AM

‘எனது உத்தரவு ரத்தாவதை விரும்பவில்லை’: தலைமை நீதிபதி அதிகாரம் தொடர்பான மனுவை விசாரிக்க நீதிபதி செலமேஸ்வர் மறுப்பு

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியின் அதிகாரம் தொடர்பான மனுவை விசாரிக்க மூத்த நீதிபதி செலமேஸ்வர் மறுத்துவிட்டார். “24 மணி நேரத்தில் எனது உத்தரவு ரத்தாவதை விரும்பவில்லை” என்று அவர் வருத்தத்துடன் குறிப்பிட்டார்.

நீதிபதிகள் பெயரில் லஞ்சம் பெறப்பட்டது தொடர்பான வழக்கை கடந்த ஆண்டு நவம்பரில் விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதி செலமேஸ்வர் அமர்வு, இந்த வழக்கை 5 நீதிபதிகள் அமர்வு விசாரிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. அடுத்த நாள் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு கூடி, நீதிபதி செலமேஸ்வர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்தது. அப்போது தீபக் மிஸ்ரா கூறியபோது, “வழக்குகளை எந்த அமர்வு விசாரிப்பது என்பதை தலைமை நீதிபதிதான் முடிவு செய்ய வேண்டும்” என்று தெரிவித்தார்.

கடந்த ஜனவரியில் உச்ச நீதிமன்ற மூத்த நீதிபதிகள் செலமேஸ்வர், ரஞ்சன் கோகோய், மதன் பி லோக்குர், குரியன் ஜோசப் பத்திரிகையாளர்களை சந்தித்து, “உச்ச நீதிமன்றத்தில் ஜனநாயகம் இல்லை, தலைமை நீதிபதி தனக்கு வேண்டியவர்களுக்கு முக்கிய வழக்குகளை ஒதுக்கீடு செய்கிறார்” என்று குற்றம் சாட்டினர்.

இந்நிலையில், உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றங்களில் வழக்குகளை ஒதுக்கீடு செய்வதில் வெளிப்படைத்தன்மையை கொண்டு வர விதிமுறைகளை வகுக்க வேண்டும் என்று கோரி மூத்த வழக்கறிஞர் அசோக் பாண்டே என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இதனை நேற்றுமுன்தினம் விசாரித்த தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு மனுவை தள்ளுபடி செய்தது.

இதே விவகாரம் தொடர்பாக முன்னாள் சட்ட அமைச்சரும் மூத்த வழக்கறிஞருமான சாந்தி பூஷண் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதில், “உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தன்னிச்சையாக வழக்குகளை ஒதுக்கீடு செய்யக் கூடாது. 3 மூத்த நீதிபதிகள் கொண்ட கொலிஜியமே வழக்குகளை ஒதுக்கீடு செய்ய வேண்டும்” என்று கோரியிருந்தார்.

இந்த மனு நீதிபதி செலமேஸ்வர் தலைமையிலான அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. சாந்தி பூஷண் தரப்பில் அவரது மகனும் மூத்த வழக்கறிஞருமான பிரசாந்த் பூஷண் ஆஜரானார். அப்போது நீதிபதி செலமேஸ்வர் கூறியபோது, “எனது பதவி காலம் 2 மாதங்கள் மட்டுமே உள்ளது. எனது முந்தைய உத்தரவு (நீதிபதிகள் பெயரில் லஞ்சம் பெறப்பட்ட வழக்கு) 24 மணி நேரத்துக்குள் ரத்து செய்யப்பட்டது. அதேபோல இப்போதைய மனுவிலும் எனது உத்தரவு 24 மணி நேரத்துக்குள் ரத்து செய்யப்படுவதை விரும்பவில்லை. இந்த விஷயத்தில் நாடு முடிவு செய்யட்டும். இம்மனுவை நான் விசாரிக்க முடியாது” என்று தெரிவித்தார்.

சாந்தி பூஷணின் மனு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அமர்வு முன்பு சென்றது. இதனை எந்த அமர்வுக்கு மாற்றுவது என்பது குறித்து உரிய முடிவு எடுக்கப்படும் என்று தலைமை நீதிபதி உறுதியளித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x