

புதுடெல்லி: ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு எதிரான வழக்கில், அமலாக்கத் துறை அதிகாரிகள் பிரிட்ஜ், ஸ்மார்ட் டி.வி. உள்ளிட்டவற்றை வாங்கியதற்கான ரசீதை ஆவணமாக நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளனர்.
ஜார்க்கண்டில் ரூ.31 கோடி மதிப்பிலான 8.86 ஏக்கர் நிலத்தை சட்டவிரோதமாக வாங்கியதாக ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வரும் ஜார்க்கணட் முக்தி மோர்ச்சா மூத்ததலைவருமான ஹேமந்த் சோரன் மீது புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக அமலாக்கத் துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. ஆனால் இந்த குற்றச்சாட்டை சோரன் மறுத்து வருகிறார்.
குற்றப்பத்திரிகை தாக்கல்: இதன் அடிப்படையில், சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடுப்பு சட்டத்தின் (பிஎம்எல்ஏ) கீழ் கடந்த ஜனவரி 31-ம் தேதி அமலாக்கத் துறை அதிகாரிகள் சோரனை கைது செய்தனர். இந்த வழக்கில் 191 பக்கங்களைக் கொண்ட குற்றப்பத்திரிகையை அமலாக்கத் துறை கடந்த மாதம் பிஎம்எல்ஏ நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.
ஹேமந்த் சோரன், ராஜ்குமார் பஹன், ஹிலாரியஸ் கச்சப், பானு பிரதாப் பிரசாத் மற்றும் வினோத் சிங் ஆகிய5 பேரின் பெயர்கள் குற்றப்பத்திரிகையில் இடம்பெற்றுள்ளன. மேலும், இவர்கள் மீதான குற்றச்சாட்டுக்கு நம்பத்தகுந்த ஆதாரமாக பிரிட்ஜ், ஸ்மார்ட் டி.வி. வாங்கியதற்கான ரசீதுகளையும் இணைத்துள்ளனர்.
ஹேமந்த் சோரனின் மேற்கண்ட சொத்தை பராமரித்து வருவதாக சந்தோஷ் முண்டா என்பவர் அமலாக்கத் துறையினரிடம் கூறியுள்ளார். இந்நிலையில், முண்டா மகன் பெயரில் பிரிட்ஜ் (2017) மற்றும் மகள் பெயரில் ஸ்மார்ட் டி.வி. (2022) வாங்கப்பட்டது தெரியவந்துள்ளது. இதற்கான ரசீது நகலை ராஞ்சியில் உள்ள கடைகளில் இருந்து அமலாக்கத் துறை அதிகாரிகள் பெற்றுள்ளனர். இதைத்தான் அமலாக்கத் துறைநீதிமன்றத்தில் சமர்ப்பித்துள் ளது.
வாக்குமூலம்: இந்த நிலத்துக்கும் தனக்கும் தொடர்பு இல்லை எனஹேமந்த் சோரன் கூறிவந்த நிலையில், சந்தோஷ் முண்டாவின் வாக்குமூலம் மிக முக்கிய ஆதாரமாக கருதப்படுகிறது. மேலும், சம்பந்தப்பட்ட நிலத்தை தான் பராமரித்து வருவதாக ராஜ்குமார் பஹன் என்பவர் கூறியிருப்பதை ஏற்க அமலாக்கத் துறைமறுத்துவிட்டது குறிப்பிடத்தக்கது.