Last Updated : 07 Apr, 2018 06:39 PM

 

Published : 07 Apr 2018 06:39 PM
Last Updated : 07 Apr 2018 06:39 PM

பாஜகவுக்கும், ஆர்எஸ்எஸ்-க்கும் அமித்ஷா, மோடி மட்டுமே மனிதர்கள், மற்றவர்கள் கிடையாது- ராகுல் காந்தி கண்டனம்

 

பாஜகவுக்கும், ஆர்எஸ்எஸ் அமைப்புக்கும் அமித்ஷா, மோடி மட்டுமே மனிதர்களாகத் தெரிகிறார்கள், மற்றவர்கள் எல்லாம் விலங்குகளாக தென்படுகிறார்கள். ஏன் அவர்களின் சொந்தக் கட்சி தலைவர்களைக் கூட மனிதர்களாக நினைக்கத் தகுதியில்லை என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.

மும்பையில் நேற்று நடந்த பாஜக கட்சியின் நிறுவன நிகழ்ச்சியில் பேசிய அந்த கட்சியின் தலைவர் அமித் ஷா எதிர்க்கட்சிகளை மிருகங்களோடு ஒப்பிட்டுப் பேசினார். 2019-ம் ஆண்டுக்கான தேர்தல் கவுண்ட்டவுன் தொடங்கிவிட்டது. இதனால், நாய்கள், பூனைகள், பாம்புகள், கீரிகள் எல்லாம் ஒன்று சேர்ந்துவிட்டது. மிகப்பெரிய வெள்ளம் வரும்போது இந்த மிருகங்கள் அனைத்தும் அடித்துச்செல்லப்படும் பாஜக எனும் ஆலமரம் மட்டுமே நிலைத்து நிற்கும் என்று அமித் ஷா பேசி இருந்தார்.

இந்த பேச்சுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பதிலடி கொடுத்துள்ளார். கர்நாடக மாநிலம், கோலார் பகுதிக்கு இன்று வந்திருந்த ராகுல் காந்தி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

பாஜக தலைவர் அமித் ஷா எதிர்க்கட்சித் தலைவர்களை மிருகங்களோடு ஒப்பிட்டு பேசி மிகுந்த அவமதிப்பு செய்துவிட்டார். இந்த பேச்சு அவரின் மனப்பான்மைக் காட்டுகிறது. இதன் மூலம் தலித்துகள், பழங்குடியின மக்கள், அவர்களின் சொந்தக்கட்சியினர் கூட மனிதர்களாக மதிக்க தகுதியில்லாதவர்களாகிவிட்டனர்.

ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளையும் மிருகங்கள் வரிசையில் அமித் ஷா சேர்த்துவிட்டார். ஆர்எஸ்எஸ், பாஜகவைப் பொருத்தவரை, அமித் ஷா, பிரதமர் மோடி மட்டுமே விலங்குகள் அல்லாத பிறவிகள். மற்றவர்கள் அனைவருமே விலங்குகள் போல் சித்தரிக்கிறார்கள். இவர்கள் இதே கண்ணோட்டத்தில்தான் உலகத்தையும் பார்க்கிறார்கள்.

ஆனால், மிகவும் மரியாதைக்குறைவான வார்த்தைகளாகும்.இருந்தாலும், அமித் ஷாவின் வார்த்தைகளை எல்லாம் பெரிதாக எடுத்துக்கொள்ளத் தேவையில்லை.

அமித் ஷா பேசியிருப்பதைப் பார்த்தால், இந்த நாட்டிலேயே 3 பேர் மட்டுமே மனிதர்கள், அனைத்துக்கும் தகுதியானவர்கள், அனைத்தையும் புரிந்தவர்கள், மற்றவர்கள் அனைவரும் எதற்கும் லாயகற்றவர்கள் என்று பேசியிருக்கிறார்.

அப்படி என்றால், தலித்கள், சிறுபான்மையினர், பழங்குடியின மக்கள், அத்வானி, மனோகர் ஜோஷி, கட்காரி கூட அமித் ஷா பட்டியலி்ல வரமாட்டார்களா, அவர்கள் மனிதர்கள் கிடையாதா.

பாஜகவுக்கு உண்மையிலேயே இது குறித்து அந்த கட்சிக்கு உள்ளே வெளிப்படையாக பேசுவதற்கு துணிச்சல் இல்லை. அதனால் எங்களிடம் பேசுகிறார்கள்.

இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x