Published : 21 Apr 2018 08:31 AM
Last Updated : 21 Apr 2018 08:31 AM

கோடீஸ்வர வாழ்க்கையை விட்டுவிட்டு சமண துறவியானார் 24 வயது ஆடிட்டர்: பணத்தால் மகிழ்ச்சியைப் பெற முடியாது என்று விளக்கம்

இல்லற வாழ்வைத் துறந்து 24 வயது ஆடிட்டர் மோக்சேஷ் ஷா சமண மதத் துறவியானார்.

மகாராஷ்டிர மாநிலம் கோலாப்பூரைச் சேர்ந்தவர் மோக்சேஷ் ஷா. சார்ட்டட் அக்கவுண்ட் படித்த பின்னர் நகரில் பிரபலமான ஆடிட்டராக மாறினார் மோக்சேஷ். மேலும் இவரது பெற்றோர் தொழிலதிபர்கள். ஆண்டுக்கு ரூ.100 கோடி விற்றுமுதலை ஈட்டும் நிறுவனத்தை நடத்தி வருகின்றனர்.

ஜேகே கார்ப்பரேஷன் என்ற பெயரில் பேக்கிங் செய்ய உதவும் காகிதங்கள், தெர்மாக்கோல் உள்ளிட்ட பொருட்களைத் தயாரித்து மும்பை உள்ளிட்ட நாட்டின் முக்கிய நகரங்களில் விநியோகம் செய்து வருகின்றனர். மேலும் வைர வியாபாரத்தையும் இவர்கள் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்த மோக்சேஷ் ஷா, திடீரென சமண மதத்தின் மீது மிகுந்து ஆர்வம் கொண்டார். பின்னர் சமண மதத் துறவியாக மாற முடிவு செய்தார். தன்னுடைய ஆசையை தனது குடும்பத்தாரிடம் அவர் தெரிவித்தார். அவர்களும் மகனின் ஆசையை நிறைவேற்ற ஒப்புதல் வழங்கினர்.

இதையடுத்து நேற்று முன்தினம் இவரை அலங்கரித்து ஊர்வலமாக அழைத்து வந்தனர். அதன் பிறகு சமண மதத் துறவிகள் இவருக்கு தீட்சை அளித்தனர்.

முன்னதாக மோக்சேஷ் கூறும்போது, “பணத்தால் எதையும் வாங்க முடியும் என்றால், பணக்காரர்கள் அனைவரும் சந்தோஷமாக வாழலாம். ஆனால் நிஜத்தில் அப்படி இருப்பதில்லை. ஆனால் எப்போதும் மகிழ்ச்சியைப் பெறுவது என்பது ஒன்றைப் பெறுவது அல்ல. நம்மிடம் இருப்பதை விட்டுவிடுவதைத்தான் நித்திய மகிழ்ச்சி என்று சொல்கிறோம். நான் சிஏ படித்து முடித்த பிறகு 2 ஆண்டுகள் எனது தந்தையின் வணிகத்தைக் கவனித்தேன்.

தொடர்ந்து பொருள் சேர்ப்பதில் எனக்கு மகிழ்ச்சி கிடைக்கவில்லை. எனவே சமண மதத் துறவியாகிவிட்டேன். கடந்த ஆண்டே இதை முடிவு செய்தேன். ஆனால் என் பெற்றோர் இதற்கு அனுமதிக்கவில்லை. ஆனால் இந்த ஆண்டு அவர்கள் ஒப்புக்கொண்டு விட்டனர். காந்திநகர்-அகமதாபாத் சாலையில் நடந்த விழாவில் அவர்கள் கலந்துகொண்டனர்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x