“ஜூன் 4-க்கு பின் பிரதமர் மோடி நீண்ட விடுப்பில் செல்வார்; இது மக்களின் உத்தரவாதம்’’ - காங்கிரஸ்

ஜெய்ராம் ரமேஷ் | கோப்புப்படம்
ஜெய்ராம் ரமேஷ் | கோப்புப்படம்
Updated on
1 min read

புதுடெல்லி: ஜூன் 4ம் தேதிக்கு பின்னர் பிரதமர் மோடி நீண்ட விடுப்பில் செல்வார்; இது மக்களின் உத்தரவாதம் என்று காங்கிரஸ் கட்சி ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது.

காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை முஸ்லீம் லீக் சிந்தனையை பிரதிபலிக்கிறது என்றும், காங்கிரஸ் தலைவர்களின் பேச்சு தேசிய ஒருமைப்பாடு மற்றும் சனாதன தர்மத்துக்கு எதிரானதாக உள்ளது என்றும் பிரதமர் மோடி குற்றம் சாட்டி இருந்த நிலையில், அதற்கு பதிலடியாக காங்கிரஸ் இவ்வாறு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் ஊடகப் பிரிவு பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் பக்கத்தில் இந்தியில் வெளியிட்டுள்ள பதிவில், "காங்கிரஸ் கட்சியின் 5 நீதியும் அதன் 25 வாக்குறுதிகளும் பத்து வருட அநீதிக்குப் பின்னர், இந்திய மக்களிடம் ஒரு நம்பிக்கையை உருவாக்கியுள்ளது. காங்கிரஸ் கட்சியின் உத்தரவாதம் காலத்தின் தேவை. இது நாட்டில் துன்பப்படும் மக்களின் குரல்.

இந்த உத்தரவாதங்களால் அச்சம் அடைந்துள்ள பிரதமர் மோடி, தனது பதவியை காப்பாற்றிக்கொள்ள ஆதாரமற்ற விஷயங்களை தெரிவிக்கிறார். பிரதமர் மோடியின் பொய்களால் இந்திய மக்கள் சோர்வடைந்துள்ளனர். ஜூன் 4ம் தேதிக்குப் பின்னர் பிரதமர் மோடி நீண்ட விடுப்பில் செல்லப்போகிறார். இது இந்திய மக்களின் உத்தரவாதம்" என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக பிஹாரின் நவாடாவில் நடந்த தேர்தல் பேரணியில் பேசிய பிரதமர் மோடி, "காங்கிரஸ் - ராஷ்ட்ரீய ஜனதா தளம் ஆட்சி பிஹாரில் நடந்த போது காட்டு ராஜ்ஜியம் நடந்தது. எனது நண்பரான நிதிஷ் குமார், பாஜகவின் சுஷில் குமார் மோடி ஆகியோர் முதல்வர் மற்றும் துணைமுதல்வராக வந்து விஷயத்தை மாற்றியமைத்தனர்" என்று தெரிவித்திருந்தார். ‘முஸ்லிம் லீக் சிந்தனையை பிரதிபலிக்கிறது காங்கிரஸ் தேர்தல் அறிக்கை’’ - பிரதமர் மோடி.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in