Published : 24 Apr 2018 10:17 AM
Last Updated : 24 Apr 2018 10:17 AM

தலைமை நீதிபதிக்கு எதிரான பதவி நீக்க நோட்டீஸ் நிராகரிப்புகாங்கிரஸ், சட்ட வல்லுநர்கள் கண்டனம்: பாஜக தலைவர்கள், முன்னாள் அட்டர்ஜி ஜெனரல் வரவேற்பு

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு எதிரான பதவி நீக்க தீர்மான நோட்டீஸ் நிராகரிக்கப்பட்டதற்கு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள், சட்ட வல்லுநர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். அதேநேரம் இந்த முடிவை பாஜக வரவேற்றுள்ளது.

காங்கிரஸ் உள்ளிட்ட 7 எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த எம்பிக்கள், மாநிலங்களவை தலைவரும் குடியரசு துணைத்தலைவருமான எம்.வெங்கய்ய நாயுடுவை கடந்த வாரம் சந்தித்தனர். அப்போது, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு எதிராக மாநிலங்களவையில் பதவி நீக்க தீர்மானம் கொண்டுவரக் கோரி நோட்டீஸ் கொடுத்தனர். சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்திய வெங்கய்ய நாயுடு, இந்த நோட்டீஸை நேற்று நிராகரித்தார்.

இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் ஊடகப் பிரிவு பொறுப்பாளர் ரந்தீப் சுர்ஜிவாலா கூறும்போது, “தலைமை நீதிபதிக்கு எதிரான நோட்டீஸை நிராகரிக்க மாநிலங்களவை தலைவருக்கு அதிகாரம் இல்லை. ஜனநாயகத்தை நிராகரிப்பவர்களுக்கும் ஜனநாயகத்தை மீட்பவர்களுக்கும் இடையே போட்டி நடைபெறுகிறது” என்றார்.

காங்கிரஸ் மூத்த தலைவர் அபிஷேக் மனு சிங்வி கூறும்போது, “இந்த நோட்டீஸை வெங்கய்ய நாயுடு நிராகரித்தது எதிர்பார்த்ததுதான். ஆனால் டெல்லி திரும்பிய ஒரே நாளில் நிராகரித்தது எதிர்பாராதது” என்றார்.

தவறான முன்னுதாரணம்

மக்களவை முன்னாள் தலைவர் சோம்நாத் சட்டர்ஜி கூறும்போது, “உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு எதிரான பதவி நீக்க தீர்மான நோட்டீஸ் குறித்து முடிவெடுக்க அரசியல் சட்டத்தில் சில நடைமுறைகள் உள்ளன. அதை கடைப்பிடிக்காமல் அவசரகதியில் மாநிலங்களவை தலைவர் முடிவெடுத்துள்ளார். இது தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தி உள்ளது. இது ஜனநாயகத்துக்கு நல்லதல்ல” என்றார்.

அதிகாரம் இல்லை

உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் கூறும்போது, “தலைமை நீதிபதிக்கு எதிரான தீர்மான நோட்டீஸை வெங்கய்ய நாயுடு எந்த அடிப்படையில் நிராகரித்தார்? தலைமை நீதிபதி மீதான குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரம் இல்லை எனக் கூற அவருக்கு அதிகாரம் இல்லை. இதுகுறித்து 3 நீதிபதிகள் குழுதான் முடிவு எடுக்க வேண்டும். நோட்டீஸில் 50 எம்பிக்கள் கையெழுத்திட்டுள்ளார்களா என்று மட்டும்தான் அவர் பார்க்க வேண்டும்” என்றார்.

சரியான முடிவு

இதுகுறித்து பாஜக மூத்த தலைவர் மீனாட்சி லேகி கூறும்போது, “நாட்டில் உள்ள ஜனநாயக அமைப்புகளை இடையூறு செய்வதில் காங்கிரஸ் கட்சிக்கு நீண்ட வரலாறு உள்ளது. வம்சாவழி ஆட்சியையும் சட்டத்தின் ஆட்சியையும் குழப்பிக் கொள்ளக் கூடாது” என்றார்.

பாஜக எம்பி சுப்பிரமணியன் சுவாமி கூறும்போது, “காங்கிரஸ் கட்சியின் இந்த செயல் தற்கொலைக்கு சமமானது. இந்த விவகாரத்தில் வெங்கய்ய நாயுடு சரியான முடிவு எடுத்துள்ளார். இந்த முடிவை எடுக்க அவருக்கு 2 நாட்கள் தேவையில்லை” என்றார்.

சட்ட வல்லுநரும் முன்னாள் அட்டர்னி ஜெனரலுமான சோலி சொராப்ஜி கூறும்போது, “வெங்கய்ய நாயுடு சரியான முடிவு எடுத்துள்ளார். இந்த முடிவை எதிர்த்து தாக்கல் செய்யப்படும் மனு ஏற்கப்பட வாய்ப்பு இருப்பதாகக் கருதவில்லை” என்றார்.

ஓய்வுபெற்ற நீதிபதி ஆர்.எஸ். சோதி கூறும்போது, “தலைமை நீதிபதியை பதவி நீக்கம் செய்வதற்கு உகந்த காரணம் இல்லை என்பது அவர்களுக்கு தெரியும். அப்படி இருந்தும் இந்த நோட்டீஸை தாக்கல் செய்தது சரியான முடிவு அல்ல” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x