“கர்நாடக காங். அரசு முழு பதவிக்காலத்தை பூர்த்தி செய்யும்” - முதல்வர் சித்தராமையா

சித்தராமையா | கோப்புப் படம்
சித்தராமையா | கோப்புப் படம்
Updated on
1 min read

பெங்களூரு: கர்நாடக காங்கிரஸ் அரசு முழு பதவிக்காலத்தை பூர்த்தி செய்யும் என்றும், 5 ஆண்டு காலத்துக்கு காங்கிரஸின் திட்டங்கள் தொடரும் என்றும் அம்மாநில முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.

மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு கர்நாடக காங்கிரஸ் அரசு கவிழ்ந்துவிடும் என பாஜக தலைவர்கள் கூறி வருவது குறித்த கேள்விக்குப் பதில் அளித்த முதல்வர் சித்தராமையா, “கடந்த சட்டமன்றத் தேர்தலில் நாங்கள் (காங்கிரஸ்) 136 தொகுதிகளில் வெற்றி பெற்றோம். 43% வாக்குகளைப் பெற்றோம். பாஜக 64 தொகுதிகளில் மட்டும்தான் வெற்றி பெற்றது. அக்கட்சி 36% வாக்குகளை மட்டுமே பெற்றது. பாஜகவைவிட காங்கிரஸ் 7% வாக்குகளை கூடுதலாகப் பெற்றது.

பாஜக கூட்டணியில் உள்ள மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியில் 19 எம்எல்ஏக்கள் மட்டுமே இருக்கிறார்கள். அந்தக் கூட்டணியில் இருந்து பலர் விரைவில் காங்கிரஸில் இணைவார்கள். 5 ஆண்டுகள் ஆட்சி செய்வதற்கான வாய்ப்பை மக்கள் எங்களுக்கு வழங்கி இருக்கிறார்கள். எங்கள் அரசு தனது முழு பதவிக்காலத்தை பூர்த்தி செய்யும். காங்கிரஸின் திட்டங்கள் 5 ஆண்டு காலத்துக்கு தொடரும்” என்று தெரிவித்தார்.

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கை குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள சித்தராமையா, “காங்கிரஸ் கட்சி தனது தொலைநோக்குப் பார்வையை தனது தேர்தல் அறிக்கையில் வெளிப்படுத்தி உள்ளது. ஒவ்வொரு குடிமகனையும் மேம்பாடு அடையச் செய்வதற்கான உறுதியை அது வழங்கி இருக்கிறது.

ஏழைகள் மேம்பாடு அடையவும், வேலைவாய்ப்பை பெருக்கவும், விவசாயிகளுக்கு நியாயமான விலை கிடைப்பதை உறுதி செய்யவும், பெண்களின் உரிமையை உறுதிப்படுத்தவும் தேவையான வாக்குறுதிகளை காங்கிரஸ் கட்சி அளித்துள்ளது. ஒருங்கிணைந்த வளர்ச்சியின் மூலம் எதிர்காலத்தை வளமாக்க காங்கிரஸ் உறுதிபூண்டுள்ளது.

காங்கிரஸ் கட்சி வெறுமனே பேசக்கூடிய கட்சி அல்ல. அது சொன்னதை செய்யக் கூடிய கட்சி. எங்கள் தேர்தல் வாக்குறுதிகள் எங்களுக்குப் புனிதமானவை. அவை காகிதத்தில் இருக்கும் வெறும் எழுத்துகள் அல்ல. நாங்கள் வாக்குறுதி அளித்தால் அதனை நிறைவேற்றுவோம்” என்று கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in