

காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தனக்கு ரூ.20 கோடி மதிப்புள்ள சொத்துகள் இருப்பதாக தனது வேட்பு மனுவில் அறிவித்துள்ளார். காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி கடந்த 2019 மக்களவைத் தொகுதியில் கேரளாவின் வயநாடு தொகுதியில் இருந்து எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டார். வயநாடு தொகுதியில் மீண்டும் போட்டியிடும் ராகுல் காந்தி நேற்று முன்தினம் வேட்பு மனு தாக்கல் செய்தார்.
வேட்பு மனுவுடன் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் தனக்கு ரூ.20 கோடிக்கு மேல் சொத்துகள் இருப்பதாக ராகுல் அறிவித்துள்ளார். அவர் அளித்துள்ள தகவலின்படி, அவரிடம் ரூ.9,24,59,264 மதிப்பிலான அசையும் சொத்துகள் உள்ளன.
அசையா சொத்துகள் ரூ.7,93,03,977 விலையில் சுயமாக வாங்கப்பட்டுள்ளன. இதன் தற்போதைய சந்தை மதிப்பு ரூ.9,04,89,000 ஆகும். இதுதவிர ரூ.2,10,13,598 மதிப்பிலான பரம்பரை சொத்துகள் அவருக்கு உள்ளன.
ராகுல் காந்தி தனக்கு ரூ.49,79,184 கடன் இருப்பதாகவும் கையில் ரூ.55,000 ரொக்கம் உள்ளதாகவும் கூறியுள்ளார். கடந்த தேர்தலில் ராகுல் காந்தி தனக்கு ரூ.15,88,77,083 மதிப்பிலான சொத்துகள் இருப்பதாக குறிப்பிட்டிருந்தார்.
அதேவேளையில் 2014-ல் அவர் ரூ.9.4 கோடி மதிப்பிலான சொத்துகள் இருப்பதாக கூறியிருந்தார். கேரளாவில் மொத்தமுள்ள 20 மக்களவைத் தொகுதிகளுக்கும் வரும் 26-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.