

புதுடெல்லி: காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், உள்ளிட்ட 14 பேர் மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்றுக் கொண்டனர்.
நாடு முழுவதும் 15 மாநிலங்களை சேர்ந்த 56 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் இந்த மாதத்தில் வெவ்வேறு தேதிகளில் முடிவடைகிறது. இதையடுத்து, இந்த இடங்களுக்கான தேர்தல் கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்றது. இதில் புதிதாக தேர்வானவர்களில், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் உட்பட 11 பேர் நேற்று முன்தினம் பதவிஏற்றுக் கொண்டனர்.
இந்நிலையில், புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் உள்ளிட்ட 14 பேர் பதவியேற்றுக் கொண்டனர். குடியரசு துணைத் தலைவரும், மாநிலங்களவை தலைவருமான ஜெகதீப் தன்கர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
இதில் சோனியா காந்தி முதல்முறையாக ராஜஸ்தான் மாநிலம் சார்பில் மாநிலங்களவை எம்.பி.யாகி உள்ளார். இவர் இதற்கு முன்புதொடர்ந்து 5 முறை மக்களவை எம்.பி.யாக பதவி வகித்துள்ளார். மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஒடிசா சார்பில் 2-வது முறையாக மாநிலங்களவை உறுப்பினராகி உள்ளார்.
காங்கிரஸ் மூத்த தலைவர்கள் அஜய் மாக்கன், சையது நசீர்ஹுசைன், பாஜகவை சேர்ந்த ஆர்பிஎன் சிங், சமீக் பட்டாச்சார்யா, மதன் ரத்தோர், ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் சஞ்சய் குமார் ஜா, பிஜு ஜனதா தளம் கட்சியின் சுபாசிஷ் குந்தியா, தேபஷிஷ் சமந்தாராய், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் கொல்லா பாபுராவ், மேதா ரகுநாத ரெட்டி, எர்ரம் வெங்கட சுப்பா ரெட்டி, பிஆர்எஸ் கட்சியின் ரவி சந்திர வத்திராஜு உள்ளிட்டோரும் மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்றுக் கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில், மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஷ், செயலாளர் பி.சி.மோடி,மாநிலங்களவை பாஜக தலைவர்பியூஷ் கோயல், காங்கிரஸ் தலைவர் கார்கே, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.