Published : 04 Apr 2024 08:55 PM
Last Updated : 04 Apr 2024 08:55 PM
பாஜக எம்.பி.யும், மதுரா தொகுதி வேட்பாளருமான ஹேமமாலினி குறித்து காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளரும், கட்சியின் மூத்த தலைவருமான ரன்தீப் சுர்ஜேவாலா பேசிய கருத்துகள் பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ள நிலையில், தனது கருத்தை பாஜக திரித்து வெளியிட்டிருப்பதாக அவர் விளக்கம் அளித்துள்ளார்.
“பாஜகவின் ஐ.டி துறை தலைவர் அமித் மாள்வியா தனது சமூக வலைதளப் பக்கங்களில் பகிர்ந்த வீடியோ எடிட் செய்யப்பட்டது. முழுமையாக வெளியிடாமல் சிதைத்து தவறாகப் பொருள்படும்படி வெளியிடப்பட்டுள்ளது. எனது நோக்கம் நிச்சயமாக ஹேமமாலினியை அவமதிப்பது இல்லை” என்று ரன்தீப் சுர்ஜேவாலா கூறியுள்ளார்.
ரன்தீப் மீதான பாஜக குற்றச்சாட்டு என்ன? - அமித் மாள்வியா தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் தேதியிடப்படாத வீடியோ ஒன்றைப் பகிர்ந்துள்ளார். அத்துடன், “காங்கிரஸ் எம்.பி. ரன்தீப் சூர்ஜேவாலா பாலியல் ரீதியிலான ஒரு விமர்சனத்தை முன்வைத்துள்ளார். அது நடிகரும், வெற்றி பெற்ற பெண்மணியுமான ஹேமாலினியை மட்டும் அவமதிப்பதாக இல்லை; ஒட்டுமொத்த பெண்களையும் அவமதிப்பதாக உள்ளது” என்று அவர் பதிவிட்டுள்ளார்.
மாள்வியா பகிர்ந்த வீடியோவில், சூர்ஜேவாலா பேசுகையில், ‘மக்கள் ஏன் எம்எல்ஏக்கள், எம்பிக்களை தேர்வு செய்கிறார்கள். அவர்கள் மக்களுக்காக குரல் எழுப்புவார்கள் என்றே தேர்வு செய்கிறார்கள். ஆனால், ஹேமமாலினியைப் போல் நக்கிப் பிழைப்பதற்காக” என்று பேசுவதுபோல் இருந்தது.
ஹேமா மாலினியின் பதில் என்ன? - 2024 மக்களவைத் தேர்தலில் உத்தரப் பிரதேசத்தின் மதுரா தொகுதியில் இருந்து போட்டியிடுவதற்காக வேட்புமனு தாக்கல் செய்யும் முன்னர் செய்தியாளர்களை சந்தித்த ஹேமமாலினி, “அவர்கள் பிரபலமானவர்களை மட்டுமே குறிவைத்து இவ்வாறு அவதூறு பேசுவார்கள். பிரபலமானோர் அல்லாதவரை விமர்சித்தால் அதில் அவர்களுக்குப் பலனில்லை அல்லவா? பெண்களை எப்படி மதிப்பது என்பது குறித்து அவர்கள் பிரதமர் நரேந்திர மோடியிடம் கற்றுக் கொள்ள வேண்டும்” என்றார்.
இதையடுத்து பதிவிட்டுள்ள ரன்தீப் சுர்ஜேவாலா, "பாஜக ஐ.டி செல்லுக்கு எப்போதுமே எதையாவது எடிட் செய்து, திரித்து போலிச் செய்தியாக வெளியிட்டு அதன் மூலம் மோடி அரசின் இளைஞர் விரோத, விவசாயிகள் விரோத கொள்கைகள், தோல்விகள், அரசமைப்பைச் சிதைக்கும் சதியிலிருந்து திசை திருப்புவது வழக்கம்.
ஹேமமாலினி விவகாரத்தில் பாஜக பெண் எதிர்ப்புப் பணியாளர்கள், நான் பேசிய வீடியோவை எடிட் செய்யப் பணிக்கப்பட்டுள்ளனர். அவ்வாறு செய்தவர்கள் ஏன் பிரதமர் இமாச்சல் பிரதேசத்தை ரூ.50 கோடி மதிப்பிலான தோழி என்று அழைத்தார் என வினவவில்லை. ஏன் ஒரு பெண் எம்.பி. நாடாளுமன்றத்தில் சூர்ப்பனகை என அழைக்கப்பட்டார் என கேள்வி கேட்கவில்லை. ஏன் ஒரு பெண் முதல்வர் மிக மோசமான ட்ரோல் செய்யப்பட்டார் எனக் கவலைப்படவில்லை.
காங்கிரஸின் விதவை என்று அழைத்தது சரியா? காங்கிரஸின் தலைமையை ஜெர்சி பசு என்று விமர்சித்தது தகுமா? என் பேச்சு பொது வாழ்வில் ஒவ்வொருவரும் மக்களுக்காக பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்பதையே குறித்தது. நாயப் சைனியாக இருந்தாலும், கட்டாராக இருந்தாலும், நானாகவே இருந்தாலும், ஒவ்வொருவரின் ஏற்றமும் தாழ்வும் அவர்களின் பணிகளின் அடிப்படையிலேயே அமையும் என்றேன். மக்களே பிரதானமானவர்கள். அவர்கள் தங்கள் தேர்வை சிரத்தையுடன் செய்ய வேண்டும். என்பதே எனது கருத்து” என்று பதிவிட்டுள்ளார்.
ரன்தீப் பகிர்ந்த வீடியோவில், “நாங்கள் ஹேமமாலினி அவர்களை மிகவும் மதிக்கிறோம். அவர் தர்மேந்திரா ஜியை மணந்துள்ளார். அவர் எங்களின் மருமகள்” எனக் கூறியிருப்பது பதிவாகியுள்ளது.
இதனைக் குறிப்பிட்டுக் காட்டும் ரன்தீப், “நான் ஹேமமாலினியையோ, இல்லை வேறு எவரையுமோ புண்படுத்த நினைக்கவில்லை. அதனால்தான் மிகத் தெளிவாக நாங்கள் ஹேமமாலினி அவர்களை மிகவும் மதிக்கிறோம். அவர் எங்களின் மருமகள் எனக் கூறியிருக்கிறேன். உண்மையில், பாஜகதான் பெண் விரோதக் கட்சி. அதனால்தான் எல்லாவற்றையும் பெண் எதிர்ப்புப் பார்வையுடன் பார்த்து, அதற்குத் தோதாக பொய்களைப் பரப்புகிறது” எனக் கூறியிருக்கிறார்.
கங்கனா மீதான விமர்சனமும், விளக்கமும்: முன்னதாக, காங்கிரஸ் கட்சியின் ஊடகப் பிரிவின் சுப்ரியா ஷிண்ட்ரே, நடிகையும் மண்டி தொகுதி பாஜக வேட்பாளருமான கங்கனா ரணாவத் குறித்த கருத்து கடும் எதிரிவினைகளை ஈர்த்தது. ‘மண்டியில் இப்போதைய ரேட் என்ன என்று யாராவது சொல்ல முடியுமா?’ என காங்கிரஸ் கட்சியின் சுப்ரியா பதிவிட்டிருந்தார். அதனுடன் கங்கணாவின் புகைப்படமும் பகிரப்பட்டு இருந்தது. இதனை இன்ஸ்டாகிராம் தளத்தில் அவர் தெரிவித்திருந்தார். எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில் அதை நீக்கினார்.
அத்துடன், “என்னுடைய ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தின் அக்சஸை பலர் கொண்டுள்ளனர். அவர்களில் யாரோ ஒருவர்தான் இந்தப் பதிவை போஸ்ட் செய்துள்ளார். எனக்கு அது குறித்த விவரம் தெரிய வந்ததும் நான் அதை டெலிட் செய்து விட்டேன். எனது பெயரில் ட்விட்டரில் இயங்கும் போலிக் கணக்கில் இதனை முதலில் பதிவிட்டுள்ளனர். இது குறித்து ட்விட்டர் வசம் நான் புகார் தந்துள்ளேன். ட்விட்டரில் இருந்த அந்தப் பதிவை அப்படியே காப்பி செய்து ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளனர். நான் எந்தவொரு தனிநபருக்கும், பெண்ணுக்கும் எதிராக தனிப்பட்ட ரீதியான கருத்தை தெரிவிக்க மாட்டேன் என அனைவரும் அறிவார்கள்” எனத் தெரிவித்தார்.
இந்நிலையில், ஹேமமாலினி மீதான விமர்சனத்தால் ரன்தீப் சூர்ஜேவாலா சர்ச்சையில் சிக்கியுள்ளார். முன்னவர் ஆக்சஸ் பிரச்சினையை சொல்ல இவர், கருத்து திரிக்கப்பட்டதாகக் கூறியிருக்கிறார்.
பெண் வசை மொழிக்கு தீர்வு என்ன? - ‘பெண்களுக்கு வீடுகளிலும், பணி இடங்களிலும் சவால்கள் இருக்கின்றன. பாலின சமத்துவத்தை அடைய நீண்ட பயணத்தில் தான் பெண்கள் இன்னமும் இருக்கிறார்கள். மகளிருக்கான 33 சதவீத இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டாலும் கூட அதை அமல்படுத்த எந்த ஒரு காலவரம்பும் நிர்ணயம் செய்யப்படவில்லை. அப்படியொரு நிர்ணயம் இல்லாதபட்சத்தில் அச்சட்டம் காகிதத்தில் மட்டுமே இருக்கிறது.
கட்சிகளின் வேட்பாளர் பட்டியலிலும் பாலின இடைவெளி பிரதிபலித்துக் கொண்டிருக்கிறது. மகளிருக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டபோது மக்களவையில் மகளிரின் பலம் வெறும் 14 சதவீதம். இது சர்வதேச சராசரியான 26.5 சதவீதத்துடன் ஒப்பிடுகையில் மிகவும் குறைவு, இமாச்சலப் பிரதேசத்தில் ஒரே ஒரு பெண் எம்.பி. தான் இருக்கிறார்.
பெண்கள் தங்களின் வாழ்க்கை எப்படி இயங்க வேண்டும் என்பதைத் தீர்மானிக்க, அவர்களின் குரல் ஒலிக்க மக்கள் பிரதிநிதிகளாகத் தேர்ந்தெடுக்கப்படுவது அவசியம். இந்தச் சூழலில் அரசியல் களத்தில் மோசமான விமர்சனங்கள் மூலம் அவர்களைப் பின்னுக்குத் தள்ளுவது ஏற்புடையதல்ல.
அதேபோல், பெண்களும் கூட பாதிக்கப்பட்ட நபராகவே இருந்தாலும் மீண்டும் அதற்கு எதிர் வசையாக பெண் வசையையே பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். பெண்கள் தங்கள் முன்னேற்றத்துக்கு எதிரான தடைகளைத் தகர்ப்பதை நோக்கி நகர வேண்டும். மாறாக பாதையைக் கடினமாக்கிவிடக் கூடாது’ என்பதே கருத்தாளர்களின் பார்வையாக இருக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT