மாநிலங்களவை எம்.பி. பதவிக் காலம் முடிந்தது: ஓய்வு பெற்றார் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்

மன்மோகன் சிங்
மன்மோகன் சிங்
Updated on
1 min read

புதுடெல்லி: முன்னாள் பிரதமர் நரசிம்மராவ் ஆட்சி காலத்தில் கடந்த 1991-ம் ஆண்டு அசாம் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டார் மன்மோகன் சிங். அப்போது அவர் மத்திய நிதியமைச்சரானார். அதன்பின் 2019-ம் ஆண்டு வரை அசாம் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

கடந்த 2019-ம் ஆண்டு முதல் ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து மன்மோகன் சிங் எம்.பி.யாக இருந்தார். கடந்த 2004-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு வரை பிரதமராக பதவி வகித்தார். தற்போது 91 வயதாகும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், தனது 33 ஆண்டு கால மாநிலங்களவை எம்.பி. பதவியில் இருந்து நேற்று ஓய்வு பெற்றார்.

இதற்கிடையில், உடல்நிலை காரணமாக மக்களவை தேர்தலில் போட்டியிடவில்லை என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி ஏற்கெனவே அறிவித்திருந்தார். எனினும், மன்மோகன் சிங் ஓய்வு பெற்றதை அடுத்து, மாநிலங்களவையில் காலியாகும் ராஜஸ்தான் மாநிலத்துக்கான எம்.பி. பதவியை சோனியா காந்தி ஏற்கிறார். இதையடுத்து மாநிலங்களவை எம்.பி.யாக சோனியா காந்தி முதல் முறையாக நாடாளுமன்றம் செல்கிறார்.

இந்நிலையில், ஓய்வு பெற்ற மன்மோகன் சிங்குக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே நேற்று நன்றி தெரிவித்தும் பாராட்டியும் கடிதம் அனுப்பி உள்ளார். அதில் கார்கே கூறியிருப்பதாவது:

உங்கள் ஓய்வு மூலம் ஒரு சகாப்தம் முடிவுக்கு வந்துள்ளது. ஒரு சிலரால் மட்டுமே இந்த நாட்டுக்காகவும், நாட்டு மக்களுக்காகவும் அர்ப்பணிப்பு உணர்வுடன் செயலாற்ற முடியும். அந்த வகையில் அந்த ஒரு சிலரில் நீங்களும் ஒருவர்.

பிரதமர் அலுவலகத்துக்கென தனி கவுரவம் மரியாதையை உங்கள் செயல்பாடுகள் ஏற்படுத்தின. உங்களுடைய அமைதியான, கண்ணியமான பேச்சுக்கு நேர்மாறாக தற்போது ஆட்சியில் உள்ளவர்களின் செயல்பாடுகள் உள்ளன.சத்தமாக பொய்களை பேசுகின்றனர். இந்தியாவில் பொருளாதார வளர்ச்சி, ஸ்திரத்தன்மையை கொண்டு வந்ததில் உங்கள் பங்களிப்பு அளப்பரியது.

நீங்கள் எடுத்த நடவடிக்கைகளால் கிடைத்த பலனைத்தான் தற்போதுஆட்சியில் உள்ளவர்கள் அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். நீங்கள் பதவி வகித்தபோது கொண்டு வந்த பொருளாதார சீர்த்திருத்தங்களுக்காக என்றும் நீங்கள் நினைவுகூரப்படுவீர்கள். இவ்வாறு கடிதத்தில் கார்கே கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in