

ஹைதராபாத்: ஹைதராபாத் அருகே சங்காரெட்டி மாவட்டத்தில் ரசாயன தொழிற்சாலை ஒன்றில் நேற்று மாலை திடீரென டேங்கர் வெடித்து தீப்பற்றியதில் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தை அடுத்துள்ள சங்காரெட்டி மாவட்டம், ஹத்நூரா மண்டலம், சந்தாபூர் எனும் ஊரில் எஸ்.பி. ஆர்கானிக் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலையில் நேற்று மாலை 50-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தொழிற்சாலையில் திடீரென ரியாக்டர் டேங்கர் வெடித்து தீப்பற்றியது.
தீ மளமளவென பிற இடங்களுக்கும் பரவியதில் பலர் தீயில் சிக்கினர். இந்த கோர விபத்தில் தொழிற்சாலையின் இயக்குநர்களில் ஒருவரான ரவி உட்பட மொத்தம் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 10-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.இவர்கள் அனைவரும் சங்காரெட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் விரைந்து சென்று தீயை அணைத்தனர். விபத்து குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.