

புதுடெல்லி: மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் சூழ்நிலையில் அதற்கு முன்னதாக ரூ.3,500 கோடி வரிக் கோரிக்கை தொடர்பாக காங்கிரஸ் கட்சி மீது எந்தவிதமான கட்டாய மற்றும் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளமாட்டோம் என உச்ச நீதிமன்றத்தில் வருமான வரித் துறை உத்தரவாதம் அளித்துள்ளது.
கடந்த 2019-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சி தாமதமாக வருமான வரி கணக்கை தாக்கல் செய்தது. இந்த நிலையில், அக்கட்சியின் பழைய கணக்கு வழக்குகள் குறித்து ஆராய்ந்த வருமான வரித் துறை காங்கிரஸ் கட்சி பல ஆண்டுகளாக வருமான வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாக தெரிவித்து ரூ.1,823 கோடி செலுத்தும்படி நோட்டீஸ் அனுப்பியது. அதற்குபின்பாக, கூடுதலாக ரூ.1,745 கோடி வரி செலுத்தக் கோரி மேலும் ஒரு நோட்டீஸையும் வருமான வரித் துறை அனுப்பியுள்ளது.
மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் வருமான வரித் துறையின் இந்த நடவடிக்கை காங்கிரஸ் கட்சிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதையடுத்து, வருமான வரித்துறை நோட்டீஸுக்கு எதிராககாங்கிரஸ் கட்சி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு நீதிபதிகள் பி.வி. நாகரத்னா மற்றும் அகஸ்டின் ஜார்ஜ் மாசிஹ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக நேற்று விசாரணைக்கு வந்ததது.
அப்போது வருமான வரித் துறை சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா கூறியதாவது: இந்த விவகாரத்தில் வருமானவரித் துறையின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்த விரும்புகிறேன். காங்கிரஸ் ஒரு அரசியல் கட்சி.மக்களவைத் தேர்தல் நடைமுறைகள் தொடங்கியுள்ளதால் அக்கட்சிக்கு எதிராக எந்தவிதமான கட்டாய மற்றும் கடுமையான நடவடிக்கை களையும் எடுக்கப் போவதில்லை. இவ்வாறு துஷார் மேத்தா தெரிவித்தார்.
இதனை பதிவு செய்து கொண்டநீதிபதிகள் அமர்வு ‘‘தற்போதைக்கு பாதகமான எந்த நடவடிக்கையையும் எடுக்க வேண்டாம்’’ எனக் கூறி வழக்கு விசாரணையை வரும் ஜூலை மாதத்துக்கு ஒத்திவைத்தது.