Published : 01 Apr 2024 01:51 PM
Last Updated : 01 Apr 2024 01:51 PM

இந்தியாவில் அறுவை சிகிச்சை மகப்பேறுகளின் எண்ணிக்கை அதிகரிப்பு: சென்னை ஐஐடி தகவல்

சென்னை: இந்தியாவில் அறுவை சிகிச்சை மகப்பேறுகளின் எண்ணிக்கை திடீரென அதிகரித்திருப்பதும், ‘மருத்துவ ரீதியான அவசியம்’ இல்லாத சூழலிலும் அறுவை சிகிச்சை மகப்பேறுகள் நடைபெறுவதும் சென்னை ஐஐடி நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக சென்னை ஐஐடி வெளியிட்டுள்ள அறிக்கை: சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழக (ஐஐடி) ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில், 2016-2021 ஆண்டுகளுக்கு இடையே நாடு முழுவதும் நடைபெற்ற அறுவை சிகிச்சை முறையிலான பிரசவங்களின் (சி- செக்சன்) எண்ணிக்கை திடீரென கடுமையாக உயர்ந்திருப்பதைக் கண்டறிந்துள்ளனர்.

ஆராய்ச்சியாளர்களான செல்வி வர்ஷினி நீதிமோகன், டாக்டர் பி.சிரிஷா, மற்றும் டாக்டர் கிரிஜா வைத்தியநாதன், பேராசிரியர் விஆர் முரளிதரன் ஆகியோரை உள்ளடக்கிய ஐஐடி மெட்ராஸ் மானுடவியல் மற்றும் சமூக அறிவியல் துறை ஆராய்ச்சியாளர்களால் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆய்வின் கண்டுபிடிப்புகள் BMC Pregnancy and Childbirth (https://doi.org/10.1186/s12884-023-05928-4) என்ற புகழ்பெற்ற மதிப்பாய்வு இதழில் வெளியிடப்பட்டுள்ளன.

அறுவை சிகிச்சை (சி-பிரிவு) மகப்பேறு என்பது ஒன்று அல்லது அதற்கும் மேற்பட்ட குழந்தைகளைப் பிரசவிப்பதற்காக தாயின் வயிற்றில் கீறலை ஏற்படுத்தும் அறுவை சிகிச்சை நுட்பமாகும். மருத்துவ ரீதியாக நியாயப்படுத்தப்பட்ட இந்த செயல்முறை உயிரை காக்கக் கூடியது. அதே நேரத்தில் நிச்சயமாகத் தேவையற்ற வகையில் மேற்கொள்ளும்போது பாதகமான பல்வேறு சுகாதார விளைவுகளை ஏற்படுத்துகிறது. தேவையற்ற செலவுகளுக்கு வழிவகுப்பதுடன் பொதுமக்களின் சுகாதார ஆதாரங்களில் அழுத்தத்தை ஏற்படுத்தும் விதமாக அமைந்து விடுகிறது.

பாதகமான பிறப்பு விளைவுகளை ஏற்படுத்தும், பிரசவ அறுவை சிகிச்சை முறைகளை நியாயப்படுத்தும் காரணிகள் (தாயின் வயது 18-க்கும் குறைவாக அல்லது 34-க்கும் அதிகமாக இருத்தல், குழந்தை பிறப்புக்கான இடைவெளி 24 மாதங்களுக்கும் குறைவாக இருத்தல், நான்கு அல்லது அதற்கும் அதிகமாக குழந்தைகளைப் பெற்ற தாய்) அதிக ஆபத்துள்ள கருவுறுதல் எனக் கருதப்படுகிறது.

தமிழ்நாடு, சட்டீஸ்கர் ஆகிய மாநிலங்களில் விரிவான பகுப்பாய்வு நடத்தப்பட்டது. சட்டீஸ்கரைப் பொறுத்தவரை கர்ப்பகால சிக்கல்கள், அதிக ஆபத்துள்ள கருவுறுதல் ஆகியவை அதிகமாகக் காணப்பட்டன. தமிழ்நாட்டில் அறுவை சிகிச்சை முறையிலான பிரசவங்கள் அதிகளவில் இருப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர்.

இந்த கண்டுபிடிப்புகளின் முக்கியத்துவம் குறித்தும், நாட்டின் சுகாதாரக் கொள்கை வகுப்பாளர்களிடையே ஏற்படும் தாக்கங்கள் குறித்தும் விவரித்த ஐஐடி மெட்ராஸ்-ன் மானுடவியல் மற்றும் சமூக அறிவியல் துறை பேராசிரியர் வி.ஆர்.முரளிதரன், “அறுவை சிகிச்சை மகப்பேறு அவசியமா என முடிவு செய்வதில் பிரசவம் நடைபெறும் இடம் (பொது மருத்துவமனை அல்லது தனியார் மருத்துவமனை) பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியதை இந்த ஆய்வின் மூலம் கண்டறிய முடிந்தது. ‘மருத்துவ ரீதியான அவசியம்’ இல்லாத சூழலிலும் அறுவை சிகிச்சை மகப்பேறுகள் நடைபெறுகின்றன. சட்டீஸ்கர் உள்ளிட்ட இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் வசதியான மக்கள் பெரும்பாலும் அறுவை சிகிச்சை மகப்பேறுகளை விரும்புகின்றனர். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை பெரும்பாலும் ஏழைகள் அதிகளவில் தனியார் மருத்துவமனைகளில் அறுவை சிகிச்சை மகப்பேறுகளை மேற்கொள்வது வியப்புக்குரியது” எனக் குறிப்பிட்டார்.

2021 வரையிலான ஐந்தாண்டுகளில் இந்தியா முழுவதும் அறுவை சிகிச்சை மகப்பேறுகள் பரவலாகி 17.2 சதவீதத்தில் இருந்து 21.5 சதவீதமாக அதிகரித்துள்ளது. தனியார் துறையைப் பொருத்தவரை இந்த எண்ணிக்கை 43.1 சதவீதமாகவும் (2016), 49.7 சதவீதமாகவும் (2021) உயர்ந்துள்ளது. அதாவது தனியார் மருத்துவமனைகளில் ஏறத்தாழ பாதிக்கு பாதி பிரசவங்கள் அறுவை சிகிச்சை மூலம்தான் நடைபெறுகின்றன.

இந்த அதிகரிப்புக்கு பல்வேறு காரணிகள் இருக்க வாய்ப்புள்ளது. நகர்ப்புறங்களில் வசிக்கும் நன்கு படித்த பெண்கள் அறுவை சிகிச்சை மகப்பேறு செய்து கொள்ள வாய்ப்புகள் அதிகம் என ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். இப்பெண்கள் சுதந்திரமாக செயல்படுவதாலும், சிறந்த வசதிகளுடன் கூடிய மருத்துவமனைகள் இருப்பதும் அறுவை சிகிச்சை மகப்பேறு அதிகரிப்புக்கு காரணமாக அமைந்துள்ளன.

குறைந்த எடையுள்ள பெண்களை விட அதிக எடை கொண்ட பெண்களுக்கு இருமடங்கு அதிகமாக அறுவை சிகிச்சை மகப்பேறுகள் நடக்கின்றன. அதேபோன்று 15-24 வயதுடைய பெண்களுடன் ஒப்பிடுகையில் 35-49 வயதுடைய பெண்கள் இரு மடங்கு அதிகமாக தங்கள் பிரசவங்களை அறுவை சிகிச்சை முறையில் நடைபெறவே விரும்புகின்றனர். அதிக எடைகொண்ட பெண்கள் குழந்தை பெற்றுக் கொள்ளும் விகிதம் 3 சதவீதத்தில் இருந்து 18.7 சதவீதமாக உயர்ந்துள்ளது. அதே நேரத்தில் 35-49 வயதுக்கு இடைப்பட்ட வயதுடையவர்கள் குழந்தை பெறுவது 11.1 சதவீதத்தில் இருந்து 10.9 சதவீதமாக குறைந்திருப்பதையும் ஆய்வு கண்டறிந்துள்ளது.

குறிப்பாக, மருத்துவ காரணங்களின்றி அறுவை சிகிச்சை மகப்பேறுகள் அதிகளவில் நடைபெற்று வந்தாலும் கர்ப்பகால சிக்கல்கள் 42.2 சதவீதத்தில் இருந்து 39.5 சதவீதமாகக் குறைந்திருப்பதை உணர முடிகிறது. பெண்களின் சுய விருப்பங்கள், அவர்களின் சமூக- பொருளாதார நிலை, கல்வி, சிக்கலைத் தவிர்க்க பாரம்பரிய மருத்துவத்தைக் கடைபிடிக்கும் மருத்துவர்கள் போன்ற மருத்துவம் சாராத பல்வேறு காரணங்கள் இருக்கக் கூடும்.

மொத்தத்தில், இந்தியாவில் 2016-2021 ஆண்டுகளுக்கிடையே ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில் தனியார் மருத்துவமனைகளில் நடைபெற்ற மகப்பேறுகளில் நான்கு மடங்கு அளவுக்கு அறுவை சிகிச்சை மூலம் நடைபெற்றுள்ளது. சட்டீஸ்கரில் அறுவை சிகிச்சை பிரசவத்திற்காக தனியார் மருத்துவமனைகளை நாடும் பெண்கள் எண்ணிக்கை 10 மடங்கும், தமிழ்நாட்டில் 3 மடங்கும் அதிகரித்துள்ளது.

அரசுப் பொது மருத்துவமனைகளில் போதிய உள்கட்டமைப்பு வசதியின்மை காரணமாக இருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் சுட்டிக் காட்டுகின்றனர். சட்டீஸ்கரில் அனுமதிக்கப்பட்ட மகப்பேறு மருத்துவர்கள் பணியிடங்களைப் பொருத்தவரை 2021-ம் ஆண்டில் 77 சதவீதம் அளவுக்கு நிரப்பப்படாமல் காலியாக இருந்துள்ளன.

2015-16, 2019-21 ஆகிய ஆண்டுகளில் தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு (NFHS) புள்ளி விவரங்களை சேகரித்து பகுப்பாய்வு செய்ததில் ஆராய்ச்சியாளர்கள் இந்த முடிவுக்கு வந்துள்ளனர். என்எப்எச்எஸ் என்பது இந்தியா முழுவதும் நடத்தப்படும் மக்கள் தொகை மற்றும் சுகாதாரக் குறிகாட்டிகள், குறிப்பாக தாய்-சேய் நலம் குறித்த தரவுகளை உருவாக்கும் கணக்கெடுப்பாகும்.

மகப்பேறு அறுவை சிகிச்சைகள் 10 முதல் 15 சதவீதத்திற்குள் இருக்க வேண்டும் என உலக சுகாதார அமைப்பு (WHO) பரிந்துரைத்துள்ளது.

ஆராய்ச்சியாளர்களின் பரிந்துரை- அறுவை சிகிச்சை மகப்பேறுகளை எச்சரிக்கையுடன் கையாள வேண்டும். ஏனெனில் இதில் பல்வேறு வேறுபாடுகள் காணப்படுகின்றன. மக்கள் தொகை மேம்பட்ட நிலைகளில் உள்ள மாநிலங்களில் அறுவை சிகிச்சை மகப்பேறுகள் அதிகளவில் நடைபெறுவது பொருத்தமாக இருக்கலாம். தமிழ்நாட்டில் ஏழைப் பெண்கள் தனியார் மருத்துவமனைகளுக்கு அறுவை சிகிச்சை மகப்பேறுக்காக செல்லும் சதவீதம் உயர்ந்து ஆபத்தான அளவை எட்டியுள்ளது. இதுபோன்ற அறுவை சிகிச்சை பிரசவங்கள் மருத்துவ ரீதியாக அவசியமின்றி இருப்பின், அதனை மேலும் பகுப்பாய்வு செய்து முறையான சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியமாகும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x