

கர்னூல்: ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் பிரச்சார கூட்டத்துக்கு அழைத்து வரப்பட்டவர்களுக்கு குவார்ட்டர் மதுபாட்டில், பிரியாணி பொட்டலம் மற்றும் ரூ.300 ரொக்கம் பகிரங்கமாக வழங்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ஆந்திராவில் மக்களவைத் தேர்தலுடன் சட்டப்பேரவைத் தேர்தலும் மே 13-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி மாநிலம் முழுவதும் பேருந்தில் சுற்றுப்பயணம் தொடங்கியுள்ளார். பயணத்தின் 3-ம் நாளான நேற்று அவர் கர்னூல் அருகே உள்ள எமிங்கனூரில் பிரச்சாரம் மேற்கொண்டார்.
இந்நிலையில் இந்தக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக வேட்பாளர்கள் சார்பில் பல ஊர்களில் இருந்தும் பொதுமக்கள் வாகனங்களில் அழைத்து வரப்பட்டனர். எமிங்கனூரில் நேற்றுமுன்தினம் ஜெகன்மோகன் பிரச்சாரம் செய்து கொண்டிருக்கும்போதே மறுபுறத்தில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியினர் தாங்கள் அழைத்துவந்த ஒவ்வொருவருக்கும் தலா குவார்ட்டர் மதுபாட்டில், பிரியாணி பொட்டலம் மற்றும் ரூ.300 ரொக்கம் வழங்கத் தொடங்கினர்.
இவற்றை அவர்கள் பகிரங்கமாக விநியோகம் செய்தது காண்போரை அதிர்ச்சி அடையச் செய்தது. இதுகுறித்து தேர்தல் ஆணையத்திடம் தெலுங்கு தேசம் கட்சிசார்பில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.