Published : 01 Apr 2024 07:57 AM
Last Updated : 01 Apr 2024 07:57 AM
புனே: தென்மண்டலம் 11 மாநிலங்கள் மற்றும் 4 யூனியன் பிரதேசங்களில் பரவியுள்ளது. ராணுவத்தின் மிகப் பழமையான மற்றும் மிகப் பெரிய தென்மண்டலத்தின் 130-வது எழுச்சி தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு தென்மண்டல ராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் அஜய் குமார் சிங் அளித்த பேட்டியில் கூறியதாவது:
ராணுவத்தில் மாற்றத்தை ஏற்படுத்துவதில் தொழில்நுட்பத்தை மேம்படுத்துவது மிக முக்கியமானது. உள்நாட்டு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி புதுமையான தீர்வுகள் காணப்படுகின்றன. இதற்காக உள்நாட்டு பாதுகாப்பு தொழில்துறையினருடன் இணைந்து செயல்படுகிறோம். ராணுவத் தளவாட உற்பத்தியில் தற்சார்பு நிலையை எட்ட இந்தியா கவனம் செலுத்துகிறது.
இதில் தென்மண்டலம் குறிப்பிடத்தக்க பங்களிப்பை அளித்துள்ளது. தென்மண்டலத்தில் பாதுகாப்பு தொழில் நிறுவனங்களும், துப்பாக்கி சுடும் மையங்களும் அதிகளவில் உள்ளன. அதனால் முக்கியமான மற்றும் நவீன ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களின் சோதனை களமாக தென்மண்டலம் உள்ளது.
தொழில்நுட்ப பரிமாற்றம் மூலம் ராணுவத்தின் தென்மண்டலம் அறிமுகப்படுத்திய 7 புதுமை கண்டுபிடிப்புகள் ராணுவத்தில் சேர்க்க தேர்வு செய்யப்பட்டுள்ளன. தொழில்துறை நிறுவனங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் இடையே தொடர்பை ஏற்படுத்த, மாநில வாரியாக கருத்தரங்குகள் மற்றும் கண்காட்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதுபோன்ற நிகழ்ச்சிகள் சென்னை மற்றும் ஹைதராபாத்தில் நடத்தப்படுகின்றன. கோவை, திருவனந்தபுரம், அகமதாபாத், பெங்களூரு ஆகிய இடங்களில் ராணுவத் தளவாட கருத்தரங்குகள் மற்றும் கண்காட்சிகள் நடத்தப்படவுள்ளன.
உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட டி-90 பீரங்கி வாகனங்கள், நிலத்திலும், நீரிலும் செல்லும் பிஎம்பி மார்க்-2 கவச வாகனங்கள், பீரங்கிகள், கே-9 வஜ்ரா பீரங்கி மற்றும் பினாகா ராக்கெட் லாஞ்சர் போன்றவற்றை ராணுவத்தின் தென் மண்டலம் காட்சிக்கு வைத்துள்ளது. இந்த கண்காட்சிகளை முப்படைதளபதிகளும் பார்வையிட்டுள்ளனர்.
ராணுவத்தின் தென்மண்டலத்தில் ஹெலிகாப்டர் படைப்பிரிவுகடந்த மாதம் 15-ம் தேதி ஏற்படுத்தப்பட்டது. இந்த படைப்பிரிவில் போயிங் நிறுவனத்தின் அப்பாச்சி ஏஎச் 64இ ரக ஹெலிகாப்டர்கள் இடம்பெறவுள்ன. வரும் மாதங்களில் 6 அப்பாச்சி ஹெலிகாப்டர்கள் டெலிவரி செய்யப்படவுள்ளன. ராணுவத்தில் அப்பாச்சி ஹெலிகாப்டர்கள் சேர்க்ப்படுவது மேற்கு எல்லை பகுதியில் தாக்குதல் திறனை மேம்படுத்தும். நமது எல்லைகளில் அனைத்துவிதமான காலநிலைகளிலும் இந்த ஹெலிகாப்டர்களை பயன்படுத்த முடியும்.
நட்பு நாடுகளுடன் கூட்டு ராணுவ பயிற்சிக்கு, ராணுவத்தின் தென்மண்டலம் மிகச் சிறப்பான வாய்ப்புகளை அளிக்கிறது. இந்தியராணுவம் 100-க்கும் மேற்பட்ட நாடுகளுடன் இணைந்து செயல்படுகிறது. 25 நாடுகளுடன் கூட்டுப் பயிற்சியில் ஈடுபடுகிறது. 70 நாடுகளைச் சேர்ந்த 3,000 ராணுவத்தினருக்கு பயிற்சி அளிக்கிறது. பிரான்ஸ், அமெரிக்கா, ரஷ்யா, மாலத்தீவு, ஐக்கிய அரபு அமீரகம், ஜப்பான், இங்கிலாந்து, சிங்கப்பூர், வியட்நாம், இலங்கைமற்றும் சில ஆப்பிரிக்க நாடுகளுடன் கூட்டு ராணுவ பயிற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT