

மகாராஷ்டிர மாநிலத்தில் வருமான வரித் துறையின் தானே அலுவலகம் சார்பில் வாசை-விரார் பகுதியில் உள்ள அமேயா பில்டர்ஸ், ஸ்வஸ்திக் குரூப் நிறுவனங்களில் 2 வாரங்களுக்கு முன் திடீர் சோதனை நடத்தப்பட்டது. இந்த நிறுவனங்களின் பங்குதாரர்களில் ஒருவரான ராஜீவ் பாட்டீல், வாசை-விரார் நகராட்சியின் முன்னாள் தலைவர். மேலும் முன்னாள் எம்எல்ஏ ஹிதேந்திர தாக்கூரின் உறவினர் ஆவார்.
இந்த நிறுவனங்களுக்கு சொந்தமான சுமார் 50 இடங்களில் நடைபெற்ற சோதனையில் கணக்கில் வராத பணமும், ரூ.5.5 கோடி மதிப்புள்ள நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டன. அப்போது ரூ.390 கோடி பதுக்கி வைத்துள்ளதை ராஜீவ் பாட்டீல் மற்றும் அவரது பங்குதாரர்கள் ஒப்புக்கொண்டனர்.
மேலும் இவர்கள் நிலப் பரிவர்த்தனை முறைகேடு மூலம் வரி மோசடி செய்திருப்பதும், இதில் ஹிதேந்திர தாக்கூருக்கு சொந்தமான விவா குழுமத்துக்கு தொடர்பு இருப்பதும் இந்த சோதனையில் தெரியவந்தது.