Published : 30 Mar 2024 02:52 PM
Last Updated : 30 Mar 2024 02:52 PM

முக்தார் அன்சாரியின் உடல் சொந்த ஊரில் அடக்கம்: மாரடைப்பில் இறந்தது உடற்கூராய்வில் உறுதி

முக்தார் அன்சாரி | கோப்புப்படம்

லக்னோ: கேங்ஸ்டராக இருந்து அரசியல்வாதியாக மாறிய முக்தார் அன்சாரியின் உடல் அவரது சொந்த ஊரில் இன்று (சனிக்கிழமை) அடக்கம் செய்யப்பட்டது. உடற்கூராய்வில் அவர் மாரடைப்பால் உயிரிழந்ததுஉறுதியாகியுள்ளது.

முன்னதாக முக்தாரின் உடல் உத்தரப் பிரதேசம் காஜிபூர் மாவட்டத்தில் உள்ள அவரது வீட்டுக்கு வெள்ளிக்கிழமை இரவு கொண்டு வரப்பட்டது. இதுகுறித்து முக்தாரின் மூத்த சகோதரர் சிப்கத்துல்லா அன்சாரி கூறுகையில், “சில தாமதத்திற்கு பின்னர் இரவு நாங்கள் உடலைப் பெற்றுக்கொண்டோம். இரவில் இறுதிச் சடங்கு செய்ய முடியாது என்பதால், சனிக்கிழமை காலை இறுதிச் சடங்குகள் நடைபெறும். எல்லோரும் அவருக்காக பிரார்த்தனை செய்துகொள்ளுங்கள்” என்று நேற்றுத் தெரிவித்திருந்தார். முக்தாரின் இறுதி ஊர்வலத்தின் போது உள்ளூர் நிர்வாகம் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்திருந்தது.

உத்தரப் பிரதேச மாநிலம் பாண்டா சிறைச்சாலையில் அடைக்கப்பட்டு இருந்த பிரபல தாதா முக்தார் அன்சாரி வியாழக்கிழமை காலமானார். மவூ தொகுதியின் எம்எல்ஏ-வாக பணியாற்றிய அவர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்ததாக சொல்லப்பட்ட நிலையில் ‘உணவில் விஷம் கொடுத்து கொல்லப்பட்டார்’ என்று அவரது குடும்பத்தினர் குற்றஞ்சாட்டியிருந்தனர்.

என்றாலும், முக்தார் அன்சாரி மாரடைப்பினால் உயிரிழந்தது உடற்கூராய்வில் உறுதிசெய்யப்பட்டுள்ளது. முக்தாரின் உடற்கூராய்விலும் அறிக்கை தயாரிப்பிலும் அங்கம் வகித்த மூத்த மருத்துவ அதிகாரி ஒருவர் கூறுகையில், “மாரடைப்பின் காரணமாகவே முக்தார் உயிரிழந்தது உடற்கூராய்வில் தெரியவந்துள்ளது” என்று தெரிவித்தார்.

முக்தாரின் உடலை, 5 மருத்துவர்கள் கொண்ட குழு ஒன்று உடற்கூராய்வு செய்தது. ராணி துர்காவதி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடந்த உடற்கூராய்வின் போது முக்தார் அன்சாரியின் இளைய மகன் உமர் அன்சாரி உடனிருந்தார். முன்னதாக, டெல்லி எய்ம்ல் மருத்துவமனையில் முக்தாரின் உடற்கூராய்வை செய்ய வேண்டும் என்று உமர் கோரியிருந்தார். அவரது கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.

இதனிடையே, முக்தார் அன்சாரியின் மரணம் தொடர்பாக 3 பேர் கொண்ட குழுவினால் மாஜிஸ்திரேட் விசாரணை நடத்தப்படும் என்று உத்தர பிரதேச அரசு தெரிவித்துள்ளது.

கடந்த 2005-ம் ஆண்டு முதல் சிறையில் இருந்து வரும் முக்தார் கடந்த 26-ம் தேதி அதிகாலை வயிற்று வலி காரணமாக பாண்டா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். லக்னோவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க வேண்டுமென்ற கோரிக்கையை அவரது குடும்பத்தினர் முன்வைத்தனர். இருந்தும் அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு, மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் மாரடைப்பு காரணமாக வியாழக்கிழமை உயிரிழந்தார் என்று தெரிவிக்கப்பட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x