

புதுடெல்லி: கடந்த 2014 மற்றும் 2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் ஒரு வேட்பாளரின் அதிகபட்ச தேர்தல் செலவினம் ரூ.70 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டது. தற்போதைய 18-வது மக்களவைத் தேர்தலில் ஒரு வேட்பாளரின் அதிகபட்ச செலவினம் ரூ.95 லட்சமாக உயர்த்தப்பட்டிருக்கிறது.
இந்த சூழலில் பல்வேறு மாநிலங்களின் செலவு பணவீக்க குறியீட்டின் அடிப்படையில் உணவு வகைகளுக்கான விலைப் பட்டியலை அந்தந்த மாவட்ட தேர்தல் அலுவலர்கள் வெளியிட்டு உள்ளனர். இதன்படி மத்திய பிரதேசத்தின் மண்ட்லா மாவட்டத்தில் ஒரு தேநீரின் விலை ரூ.7 ஆகவும் ஒரு சமோசாவின் விலை ரூ.7.50 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. அந்த மாநிலத்தின் பாலாகாட் மாவட்டத்தில் ஒரு தேநீரின் விலை ரூ.5 ஆகவும் ஒரு சமோசாவின் விலை ரூ.15 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.
வடகிழக்கு மாநிலமான மணிப்பூரின்தவுபல் மாவட்டத்தில் ஒரு தேநீர், ஒரு சமோசாவின் விலை தலா ரூ.10 ஆக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. பஞ்சாபின் ஜலந்தரில் ஒரு சிக்கன் பிரியாணி விலை ரூ.250 ஆகவும் ஒரு மட்டன் பிரியாணியின் விலை ரூ.500 ஆகவும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
சென்னையில் கடந்த 2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் ஒரு சிக்கன் பிரியாணியின் விலை ரூ.180 ஆக நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. ஆனால் தற்போது ஒரு சிக்கன் பிரியாணியின் விலை ரூ.150 ஆக குறைக்கப்பட்டு உள்ளது. கடந்த மக்களவைத் தேர்தலின்போது சென்னையில் ஒரு மட்டன் பிரியாணியின் விலை ரூ.200 ஆக நிர்ணயிக்கப்பட்டது. அந்த விலை வரம்பு தற்போதைய மக்களவைத் தேர்தலிலும் தொடர்கிறது.
சென்னையில் ஒரு தேநீரின் விலை ரூ.10 முதல் ரூ.15 ஆகவும் காபியின் விலை ரூ.15 முதல் ரூ.20 ஆகவும் அறிவிக்கப்பட்டு உள்ளது. தண்ணீர் பாட்டில் ரூ.20, மோர் ரூ.20, ஒரு மீட்டர் பூ ரூ.65, வாழை மரத்தின் விலை ரூ.700 ஆக நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது.
தேர்தல் ஆணையத்தின் விலைப் பட்டியல் குறித்து சமூக வலைதளங்களில் மிகப்பெரிய அளவில் விவாதம் நடைபெற்று வருகிறது. பல்வேறு மாவட்டங்களில் உண்மையான விலை நிலவரத்துக்கும் தேர்தல் ஆணைய விலை நிலவரத்துக்கும் இடையே மிகப்பெரிய வித்தியாசம் இருப்பதாக சமூக வலைதள வாசிகள் சுட்டிக்காட்டி உள்ளனர்.
இதுகுறித்து தலைமைத் தேர்தல் ஆணைய அதிகாரிகள் கூறும்போது, "உணவு வகைகளின் விலைப் பட்டியலில் சில வேறுபாடுகள் இருக்கலாம். எனினும் வேட்பாளர்கள் எங்களது விலை பட்டியலின் அடிப்படையிலேயே தேர்தல் செலவு விவரங்களைக் கணக்கிட வேண்டும். வேட்புமனு தாக்கல் செய்த நாள் முதல் தேர்தல் முடிவை அறிவிக்கும் நாள் வரை வேட்பாளர்கள் தங்களது செலவு கணக்குகளை முறையாகப் பராமரிக்க வேண்டும்.
அவர்கள் தாக்கல் செய்யும் செலவு கணக்கு விவரங்களை தலைமைத் தேர்தல் ஆணையம் மிகவும் தீவிரமாக ஆய்வு செய்யும். இதில் மோசடிகள் கண்டறியப்பட்டால் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின்படி தகுதி நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவித்தனர்.