

நந்தியாலா: என் மீதும், தெலுங்கு தேசம் கட்சியினர் மீதும் தற்போதைய ஆட்சியில் பொய் வழக்குகள் போடப்பட்டன. அப்படி பொய் வழக்கு போட்டவர்களிடம் நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் வட்டியுடன் அந்த கடனை திருப்பி செலுத்தி விடுவோம் என முன்னாள் மாணவர் சந்திரபாபு நாயுடு எச்சரித்துள்ளார்.
ஆந்திர மாநிலம், நந்தியாலா மாவட்டத்தில் நேற்று தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் ஜனகானபல்லி எனும் இடத்தில் கூடியிருந்த மக்களிடையே பேசியதாவது: ஆந்திர மாநிலத்தின் எதிர்கால நலனுக்காகவே கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. என்னுடயது ‘விஷன்’. ஜெகனுடையது ‘பாய்சன்’. கடந்த 5 ஆண்டுகாலத்தில் முதல்வர் ஜெகன் ஆந்திர மக்களின் நலனை, விஷம் போல் கெடுத்து விட்டார்.
ஜெகனின் சித்தப்பா கொலை வழக்கில் அவரது தங்கை மீதே வழக்கை திசை திருப்புகிறார் ஜெகன். ஜெகன் வசிக்கும் தாடேபல்லி வீட்டிலிருந்து கண்டெய்னர் மூலம், மதுபானம், மணல் கொள்ளையில் ஈடுபட்ட பணம், தேர்தலில் செலவு செய்ய இரவோடு இரவாக செல்கிறது.
3 தலைநகரங்களை உருவாக்குவேன் என கடந்த 5 ஆண்டுகளாக கூறி வந்த ஜெகன், அதை செய்தாரா ? வெறும் பேச்சுதான் அவரிடம் இருக்கிறது. செயலில் ஒன்றும் இல்லை.
பெண்களுக்கு ஆந்திராவில் பாதுகாப்பு இல்லை. கடந்த 5 ஆண்டுகளில் அரசு வேலை யாருக்கும் வழங்கவில்லை. இளைஞர்களுக்கு வேலை கொடுப்பேன் என கூறி ஏமாற்றியவர் ஜெகன்.
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பெண்கள் நலத்திட்டத்திற்காக ஒவ்வொருவருக்கும் மாதம் ரூ.1,500 வழங்கப்படும். முதியோருக்கு மாதம் ரூ. 4 ஆயிரம் உதவி தொகை வழங்கப்படும்.
ஜெகன் ஆட்சியில் எங்கள் மீது பொய் வழக்கு போட்டவர்களிடம் நாங்கள் ஆட்சிக்கு வந்ததும், வட்டியும், முதலுமாக திருப்பி வழங்கப்படும். இவ்வாறு சந்திரபாபு தெரிவித்தார்.