Last Updated : 16 Feb, 2018 07:38 AM

 

Published : 16 Feb 2018 07:38 AM
Last Updated : 16 Feb 2018 07:38 AM

அயோத்தியில் வேறு இடத்தில் மசூதி கட்ட நிலம், ரூ.5000 கோடி பணம், எம்.பி. பதவி: சமரசத்திற்கு பேரம் பேசியதாக மவுலானா சல்மான் நத்வி மீது புகார்

அயோத்தி விவகாரத்தில் சமரசம் செய்ய பேரம் பேசியதாக மவுலானா சையது சல்மான் ஹுசைனி நத்வி மீது புகார் கிளம்பியுள்ளது. மசூதி கட்டுவதற்கு நிலம், அதற்கான செலவுக்கு ரூ.5,000 கோடி, தனக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி ஆகியவை அவர் கேட்டதாக ஸ்ரீஸ்ரீரவிசங்கர் தரப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

வாழும்கலை அமைப்பின் நிறுவனரான ஸ்ரீஸ்ரீரவிசங்கர் அயோத்தி விவகாரத்தில் சமரசம் செய்து வைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார். இதற்காக, ‘அயோத்யா சம்பவ்னா சாம்னிவாய் மஹா சமிதி’ என்ற ஓர் அமைப்பையும் தொடங்கியுள்ளார்.

கடந்த நவம்பரில் ஸ்ரீஸ்ரீ, அயோத்தி மற்றும் லக்னோ சென்று அயோத்தி வழக்கு சம்பந்தப்பட்டவர்களை சந்தித்து திரும்பினார். இதையடுத்து கடந்த வாரம் பெங்களூரூவில் அவரை ஒரு முஸ்லிம் குழுவினர் சந்தித்தனர். இதில் இடம்பெற்றவர்களில் அகில இந்திய முஸ்லிம் தனிச்சட்ட வாரியத்தின் நிர்வாகக் குழு உறுப்பினர் மவுலானா சையது சல்மான் ஹுசைனி நத்வி முக்கியமானவர் ஆவார்.

இந்த சந்திப்பில் மவுலானா சல்மான், மசூதியை வேறு இடத்தில் மாற்றி அமைக்க இஸ்லாம் அனுமதிப்பதாகக் கூறிய கருத்து சர்ச்சைக்குள்ளானது. இதற்கு முஸ்லிம்கள் தரப்பில் கடும் எதிர்ப்பு கிளம்பியதால் முஸ்லிம் வாரியத்தின் நிர்வாகக் குழுவில் இருந்து சல்மான் நீக்கப்பட்டார். இதைப்பற்றி கவலைப்படாத நத்வி, தாம் ஸ்ரீஸ்ரீயுடன் இணைந்து தொடர்ந்து சமரசப்பேச்சில் ஈடுபடப்போவதாக அறிவித்தார். இது குறித்த அவரது விரிவான பேட்டியும் ‘தி இந்து’வில் நேற்று முன்தினம் வெளியானது.

இந்நிலையில் ஸ்ரீஸ்ரீ அமைப்பிடம் சல்மான் நத்வி பேரம் பேசியதாகப் புகார் கிளம்பியுள்ளது. இது குறித்து ஸ்ரீஸ்ரீயின் சமரச அமைப்பான அயோத்யா சம்பவ்னா சாம்னிவாய் மஹா சமிதியின் பொதுச்செயலாளர் அமர்நாத் மிஸ்ரா கூறும்போது, “கடந்த பிப்ரவரி 5-ல் பாபர் மசூதி-ராமர் கோயில் பிரச்சினையில் லக்னோவில் நத்வியின் மதரசாவில் சந்திப்பு நடந்தது. அப்போது அவர் எங்கள் பரிந்துரையை எழுதி அளிக்கும்படி கேட்டார். இது சம்பந்தப்பட்டவர்களுக்கும் அனுப்பப்பட்டது. அவர் மெக்காவில் இருப்பதுபோல் அயோத்தியின் வேறு இடத்தில் பிரம்மாண்ட மசூதி கட்ட இருப்பதாகவும் அதற்கு 200 ஏக்கர் நிலம், செலவுக்கு ரூ.5,000 கோடியுடன் தனக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி அளிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி இருந்தார்” என்று தெரிவித் துள்ளார்.

இப்புகாரை மவுலானா சல்மான் நத்வி மறுத்துள்ளார். இது தொடர்பாக அவர் ஒரு செய்தி நிறுவனத்திடம் கூறும்போது, “அமர்நாத் மிஸ்ரா என்பவர் யார் என்றே எனக்குத் தெரியாது. இதுபோன்றவர்கள் அங்கு கோயில் அல்லது மசூதியை கட்ட விரும்பவில்லை. என் மீது புகார் கூறுபவர்கள் சைத்தான்கள் ஆவர். கடவுளின் நற்பணிகளில் பிரச்சினை செய்வது மட்டுமே அவர்களின் பணியாகும். இவர்களுக்கு இந்து-முஸ்லிம் ஒற்றுமை அச்சத்தை அளிக்கிறது. இந்த ஒற்றுமையை நான் மட்டுமே வலியுறுத்தி வருகிறேன் என்பதை அவர் நன்கு அறிந்து வைத்துள்ளார்” என்று தெரிவித்தார்.

இந்தப் பிரச்சினையில் ஸ்ரீஸ்ரீ தரப்பில் அவரது செய்தித் தொடர்பாளர் தர்ஷன் ஹாத்தி கூறும்போது, “ஸ்ரீஸ்ரீஜியை பொறுத்தவரை அயோத்தி விவகாரத்தில் மதநல்லிணக்கத்தில் சமரசம் செய்ய விரும்புகிறார். இதற்காக எந்தவித பேரமும் பேச அவர் விரும்பவில்லை. இதில் நத்வி பேரம் பேசியது குறித்து எங்களுக்குத் தெரியாது” என்றார்.

இதனிடையே கடந்த 5-ம் தேதி நத்வியின் மதரசாவில் நடந்த பேச்சுவார்த்தையின்போது உடனிருந்த, அகில இந்திய இமாம் கவுன்சிலின் பொதுச்செயலாளர் மவுலானா மஸ்ரூர் கான், நத்வி பேரம் பேசியதாக ஒப்புக் கொண்டுள்ளார்.

தனிச்சட்ட வாரியத்தில் இருந்து நீக்கப்பட்ட நத்வி இந்து தரப்பு ஆதரவாளராக மாறிவிட்டதாக முஸ்லிம் தரப்பினர் புகார் கூறினர். இப்போது இந்து தரப்பில் இருந்தும் சல்மான் மீது புகார் கிளம்பியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x