Published : 29 Mar 2024 09:37 PM
Last Updated : 29 Mar 2024 09:37 PM

சமோசா ரூ.15, பிரியாணி ரூ.150... பிற மாநிலங்களில் வேட்பாளர் செலவின விலைப் பட்டியல் எப்படி?

புதுடெல்லி: மக்களவையைத் தேர்ந்தெடுக்கும் திருவிழாவுக்கு நாடே தயாராகி வருகிறது. அரசியல் கட்சிகள் பரபரப்பாக பிரச்சாரத்தில் இருக்கும் நேரத்தில் வேட்பாளர்களின் தேர்தல் செலவு குறித்து விலைப் பட்டியலை நிர்ணயித்துள்ளது தேர்தல் ஆணையம். அந்தந்த மாவட்ட தேர்தல் அலுவலர்கள் இந்த விலைப் பட்டியலை நிர்ணயம் செய்து கண்காணித்தும் வருகின்றனர். அவற்றில் உணவு குறித்த விவரம் பார்ப்போம்.

டீ, சமோசா தொடங்கி சைவம், அசைவம், லஸ்ஸி, தந்தூரி, தோதா, தால் மக்னி என வகை வகையாய் நீள்கிறது பட்டியல். தமிழகம், ஆந்திரா உள்ளிட்ட அநேக மாநிலங்களில் வேட்பாளருக்கான தேர்தல் செலவு வரம்பு ரூ.95 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. என்றாலும் அருணாச்சலப்பிரதேசம், கோவா, சிக்கிம் மாநிலங்களில் இந்த அளவு ரூ.75 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேபோல் யூனியன் பிரதேசங்களில் அந்தந்த பகுதிகளுக்கு ஏற்ப ரூ.75 லட்சம் முதல் ரூ.95 லட்சமாக மாறுபடுகிறது.

தமிழகத்தைப் பொறுத்தவரை தேர்தல் செலவு கடந்த 2014-ல் ரூ.40 லட்சமாக இருந்த நிலையில், 2019-ல் ரூ.70 லட்சமாக உயர்த்தப்பட்டது. இந்நிலையில், தற்போது ரூ.95 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் நிர்ணயிக்கப்பட்ட உணவு விலைப் பட்டியல்:

  • சைவ உணவு ரூ.100
  • அசைவ உணவு ரூ.175
  • தயிர் சாதம் உள்ளிட்ட கலவை சாதத்துக்கு ரூ.40
  • முட்டை பிரியாணி ரூ.100
  • கோழி பிரியாணி ரூ.150,
  • மட்டன் பிரியாணி ரூ.200
  • பிளைன் பிரியாணி ரூ.100
  • வெஜ் பிரியாணி ரூ.70
  • டீ, காபி ரூ.15
  • குளிர்பானம் ரூ.30
  • மினரல் வாட்டர் ரூ.20

அதேநேரத்தில் பஞ்சாபின் ஜலந்தரில் ஒரு கோப்பைத் தேநீர், சமோசாவுக்கு தலா ரூ.15, சோலா பதூர் ரூ.40 என விலை நிர்ணியக்கப்பட்டுள்ளது. இந்தப் பட்டியில் கோழி மற்றும் ஆட்டிறைச்சி முறையே கிலோ ரூ.250 மற்றும் ரூ.500 ஆகவும், இனிப்புகளான தோதா கிலோ ரூ.400, நெய் பின்னி கிலோ ரூ.300 ஆகவும் இடம்பிடித்துள்ளன.

அதேநேரத்தில் மத்தியப் பிரதேசத்தின் மாண்டிலாவில் போட்டியிடும் வேட்பாளர் கோப்பைத் தேநீருக்கு ரூ.7-ம், சமோசாவுக்கு ரூ.7.50-ம் செலவு செய்தால் போதும். இனக் கலவரத்தால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூரின் தவுபால் மாவட்டத்தில் தேநீர், சமோசா, கச்சோரி, ஹஜுர் (பேரிச்சை பழம்) மற்றும் காஜா (இனிப்பு) போன்றவை தலா ரூ.10 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன.

தெங்னோவுபால் மாவட்டத்தில் கறுப்பு தேநீர் ரூ.5, பால் சேர்த்து ரூ.10 ஆகவும் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேபோல் வாத்துக்கறி கிலோ ரூ.300, பன்றியிறையிச்சி கிலோ ரூ.500 வரை அனுமதிக்கப்படுகிறது. இந்தப் பட்டியில் கறிக்கோழி, ரோகு, மிர்கால் போன்ற மீன் வகைகளும் இடம்பிடித்துள்ளன.

கிரேட்டர் நொய்டாவின் கவுதம புத்தா நகரில் சைவ உணவு ரூ.100, கச்சோரி ரூ.15, சாண்ட்விச் ரூ.25, ஜலேபி கிலோ ரூ.90 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஹரியாணாவின் ஜிந்தில் வேட்பாளர் ரூ.300 தந்தூரி வகைகள், தால் மக்னி ரூ.130, மதார் பன்னீர் ரூ.160 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

குறைந்த விலையாக மத்தியப் பிரதேசத்தின் பாலாஹத்தில் தேநீர் ரூ.5, சமோசா ரூ.10 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இங்குள்ள பட்டியலில் இட்லி சாம்பார், அவல் உப்புமா ரூ.20, தோசை, உப்புமா ரூ.30 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. .

இதனிடையே இந்த விலை நிர்ணயம் குறித்து இந்திய கம்யூனிஸ்ட் சிவகங்கை நகரச் செயலாளர் மருது கூறும்போது, "தேர்தல் அதிகாரிகள் வெளியிட்ட விலைப் பட்டியலில் பல பொருட்களின் விலை சந்தை, விலையைவிட கூடுதலாக நிர்ணயித்துள்ளனர். சாதாரணமாக டீ ரூ.10 முதல் ரூ.12 கிடைக்கிறது. ஆனால் ரூ.15 நிர்ணயித்துள்ளனர். மேலும் மொத்தமாக வாங்கும்போது அல்லது தயாரிக்கும்போது விலை மேலும் குறையும்.

அதேபோல் மட்டன் பிரியாணி ரூ.150 முதல் ரூ.180-க்கு கிடைக்கிறது. ஆனால் ரூ.200-ஆக நிர்ணயித்துள்ளனர். அதேபோல் சிக்கன் பிரியாணி ரூ.100 முதல் ரூ.120-க்கு கிடைக்கிறது. அதை ரூ.150-ஆக நிர்ணயித்துள்ளனர்" என்றார்.

மக்கள் பிரதிநித்துவச்சட்டம் 1955 பிரிவு 77 (1), வேட்பாளர்கள் அவர்கள் வேட்பு மனு தாக்கல் செய்த நாளில் இருந்து தேர்தல் முடிவுகள் அறிவிக்கும் வரை அவர்களின் செலவுக் கணக்குகளை வைத்திருப்பார்கள் எனத் தெரிவிக்கிறது. நாட்டிலுள்ள 543 மக்களவைத் தொகுதிகளுக்கு ஏப்ரல் 19-ம் தேதி முதல் ஏழு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை ஜூன் 4-ம் தேதி நடக்க இருக்கிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x