Last Updated : 29 Mar, 2024 07:39 PM

 

Published : 29 Mar 2024 07:39 PM
Last Updated : 29 Mar 2024 07:39 PM

பிரியங்காவின் ராஜஸ்தான் நம்பிக்கை... யார் இந்த சஞ்சனா ஜாதவ்? | 2024 தேர்தல் கள புதுமுகம்

சஞ்சனா ஜாதவ்

புதுடெல்லி: மக்களவைத் தேர்தலில் களம் காணும் கவனிக்கத்தக்க புதுமுக வேட்பாளர்களைப் பற்றி பார்த்து வருகிறோம். அந்த வகையில், ராஜஸ்தானின் பாரத்பூர் தொகுதியில் களம் காண்கிறார் 26 வயதான சஞ்சனா ஜாதவ். இவர் பட்டியலின மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு முக்கிய இளம் தலைவராக பார்க்கப்படுகிறார். ராஜஸ்தானில் இந்த முறை காங்கிரஸ் கட்சி வித்தியாசமான வியூகம் வகுத்து செயல்படுவதாகச் சொல்லப்படுகிறது. இந்நிலையில், காங்கிரஸ் கட்சிக்குள் வளர்ந்து வரும் அரசியல்வாதியான சஞ்சனா ஜாதவ், காங்கிரஸ் தலைமையை எப்படி இந்த சிறு வயதிலேயே கவர்ந்தார், அவரின் பின்புலம் என்ன என்பது குறித்து பார்ப்போம்.

காங்கிரஸ் - பாஜக: மக்களவைத் தேர்தலுக்கு அனைத்து கட்சிகளும் தயாராகி வரும் நிலையில், அரசியல் களம் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. ராஜஸ்தானில் மொத்தம் 25 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. பாஜகவின் செல்வாக்கு மிகுந்த இந்தி மண்டலத்தின் முதன்மை மாநிலமான ராஜஸ்தானில் மீண்டும் அதிக எம்.பிக்களை பெற தீவிர முனைப்புக் காட்டுகிறது பாஜக. சம பலத்துடன் மோதிக்கொள்ளும் காங்கிரஸ் - பாஜக கட்சிகளுக்குப் பிரத்யேகமான சாதக, பாதகங்கள் இருக்கின்றன.

கடந்த 2014 மற்றும் 2019 மக்களவைத் தேர்தல்களில், ராஜஸ்தானின் 20-க்கும் மேற்பட்ட தொகுதிகளிலும் பாஜகதான் வெற்றி பெற்றது. இதனால் தற்போது காங்கிரஸ் எப்படியாவது அதிக அளவிலான எம்.பி.க்களை பெற புதிய வியூகங்களை வகுத்து, ராஜஸ்தானில் புதுமுக வேட்பாளர்களை களமிறக்கி, தீவிர அரசியலில் ஈடுபட்டுள்ளது. அந்த வகையில், பாரத்பூர் தொகுதியில் கவனம் ஈர்த்துள்ளார் சஞ்சனா ஜாதவ்.

யார் இந்த சஞ்சனா ஜாதவ்? - சஞ்சனா ஜாதவ், பாரத்பூர் மக்களவைத் தொகுதியின் புசாவரில் வசிப்பவர். இவர் கப்டன் சிங் என்ற கான்ஸ்டபிளை மணந்தார். எல்எல்பி வரை படித்திருக்கும் இவர் அரசியலில் மிகுந்த ஆர்வமிக்கவராகவும் அறியப்படுகிறார். சஞ்சனா அல்வார் மாவட்ட கவுன்சில் உறுப்பினராகவும் இருந்துள்ளார். முன்னதாக, 2023 சட்டப்பேரவைத் தேர்தலின்போது, ​​மூத்த மற்றும் நான்கு முறை எம்.எல்.ஏ-வாக இருந்த பாபுலால் பைர்வாவுக்குப் பதிலாக கத்துமார் தொகுதிக்கான காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டபோது சஞ்சனா முக்கியத்துவம் பெற்றார்.

அப்போது தாழ்த்தப்பட்ட சாதியினருக்காக ஒதுக்கப்பட்ட கத்துமார் சட்டமன்றத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டார் சஞ்சனா ஜாதவ். ஆனால் இவர் பாஜக வேட்பாளர் ரமேஷ் என்பவரிடம் வெறும் 409 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். ஆனால் அவரது துடிப்பான அரசியல் செயல்பாடுகள் மேலிடத்தில், அவருக்கு நன்மதிப்பை பெற்று கொடுத்தது. அதோடு, பிரியங்கா காந்தியின் குட் லிஸ்டில் இடம் பெற்றுள்ள பெண்களில் சஞ்சனாவும் ஒருவர்.

இந்நிலையில், தற்போது பாரத்பூர் மக்களவைத் தொகுதியில் ராம்ஸ்வரூப் கோலியை வேட்பாளராக களமிறக்கியுள்ளது பாஜக. காங்கிரஸ் வேட்பாளர் சஞ்சனா ஜாதவ் மற்றும் பாஜக வேட்பாளர் ராம்ஸ்வரூப் கோலி இடையே நேரடி போட்டி நிலவுகிறது. ராம்ஸ்வரூப் கோலி 2004-இல் பாஜக சார்பில் பயானா மக்களவைத் தொகுதியில் வெற்றி பெற்று எம்பி ஆனார். இந்த முறை பாரத்பூர் எம்பி ரஞ்சிதா கோலிக்கு (Ranjita Koli) சீட் மறுக்கப்பட்ட நிலையில், ராம்ஸ்வரூப் கோலியை (Ramswaroop Koli) வேட்பாளராக நிறுத்தியுள்ளது பாஜக.

— chhavi avasthi (@chhavi_avasthi) March 28, 2024

சஞ்சனா வெற்றி பெற்றால் ராஜஸ்தானில் இருந்து வந்த இளம் வயது எம்.பி என்ற சாதனையை வசப்படுத்துவார். தற்போது, ​​ராஜஸ்தானில் இளம் வயது எம்.பி என்ற சாதனை, காங்கிரஸ் முன்னாள் துணை முதல்வர் சச்சின் பைலட் பெயரில் உள்ளது. அவர் 2004 மக்களவைத் தேர்தலில் தவுசா தொகுதியில் இருந்து எம்பி ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது. சஞ்சனா ஜாதவ் இத்தொகுதியில் வெற்றியை பதிவு செய்வாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

முந்தைய பகுதி: ‘இளம் மம்தா’, உள்ளூர் போராளி... - யார் இந்த சயோனி கோஷ்? | 2024 தேர்தல் கள புதுமுகம்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x