பணம் இல்லாததால் தேர்தலில் போட்டியிடவில்லை: நிர்மலா சீதாராமன் தகவல்

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

புதுடெல்லி: மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் அளவுக்கு என்னிடம் பணம் இல்லை என்று மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாவது:

வரும் மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவது குறித்து பரிசீலிக்குமாறு எங்களது கட்சி சார்பில் என்னிடம் தெரிவிக்கப்பட்டது. நானும் அது குறித்து 10 நாட்கள் வரை யோசித்துப் பார்த்தேன். பின்னர் தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை என்ற எனது முடிவை தெரிவித்தேன்.

தமிழகம் அல்லது ஆந்திராவில் இருந்து போட்டியிட எனக்கு பரிந்துரை வந்தது. பாஜக தலைவர் ஜே.பி.நட்டா இதனை முன்மொழிந்தார். இருந்தும் நான் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று அவரிடம் தெரிவித்தேன்.

மேலும், என்னிடம் தேர்தலில் போட்டியிடும் அளவுக்கு பணம் இல்லை. தமிழகம் அல்லது ஆந்திராவில் போட்டியிட்டால் மதம், ஜாதி போன்றவை வெற்றிக்கான காரணிகளில் பிரதானமானதாக பார்க்கப்படும். அதனால்தான் நான் தேர்தலில் போட்டியிடவில்லை. எனது முடிவை கட்சியும் ஏற்றுக் கொண்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். தற்போது மாநிலங்களவை உறுப்பினராக உள்ள அவரது பதவிக்காலம் 2028-ம் ஆண்டு நிறைவடையவுள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in