Last Updated : 20 Feb, 2018 09:00 PM

 

Published : 20 Feb 2018 09:00 PM
Last Updated : 20 Feb 2018 09:00 PM

வங்கி மீது மக்கள் வைத்திருந்த நம்பிக்கையை தகர்த்துவிட்டது பாஜக - மம்தா பானர்ஜி கடும் சாடல்

 

வங்கித்துறை மீது மக்கள் வைத்திருந்த நம்பிக்கையை மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு தகர்த்துவிட்டது என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கடுமையாகச் சாடியுள்ளார்.

மேற்கு வங்க மாநிலத்தின் வடபகுதியில் உள்ள மால்டா நகரில் முதல்வர் மம்தா பானர்ஜி இன்று பொதுக்கூட்டம் ஒன்றில் பேசினார். அப்போது பஞ்சாப் வங்கியில் நடந்துள்ள மோசடி குறித்தும், நிரவ் மோடி ரூ.11,400 கோடி மோசடி செய்தது குறித்தும் கடுமையாகச் சாடினார். அவர் கூறியதாவது:

வங்கிகள் மீது நம்பிக்கை வைத்துதான் மக்கள் தாங்கள் கடினமாக உழைத்து சம்பாதித்த பணத்தை அதில் டெபாசிட் செய்து வருகிறார்கள். ஆனால், சமீபகாலமாக வங்கி முறை அந்த நம்பிக்கையை தகர்த்து வருகிறது. இப்படி நடந்தால், மக்கள் தங்கள் பணத்தை எங்கு கொண்டுபோய் சேமிப்பார்கள்.

மத்தியில் பாஜக தலையிலான தேசிய ஜனநாயக் கூட்டணி அரசு ஆட்சிக்கு வந்தபின் மக்கள் வங்கி மீது வைத்திருந்த நம்பிக்கையே தகர்ந்துவிட்டது. வங்கிகளும் மக்கள் பணத்தை கொள்ளையடிக்க அனுமதித்துவிட்டன.

பாஜக தலைமையிலான மத்திய அரசு நிதித்தீர்வு மற்றும் வைப்புத்தொகை காப்பீடு மசோதாவை அறிமுகம் செய்துள்ளது. இந்த மசோதாவை நான் தொடக்கத்தில் இருந்தே எதிர்த்து வருகிறேன்.

இந்த மசோதா மூலம், மக்களின் பணம், சேமிப்பு டெபாசிட் ஆகியவை ஏமாற்றப்படும். இந்த மசோதாவை விரைவாக மத்திய அ ரசு வாபஸ் வெற வேண்டும்.

வங்கிகளில் ஆயிரணக்கில் கொள்ளையடிக்கப்பட்ட பணத்தின் மூலம் ஏற்பட்ட இழப்பை, பிஎப், வைப்புத் தொகை, சிறு சேமிப்பு ஆகியவற்றின் மீதான வட்டியைக் குறைத்து ஈடு செய்ய மத்திய அ ரசு முயற்சிக்கிறது.

மகளிர் சுயஉதவிக்குழு, விவசாயிகளுக்கு கடன்தர வங்கிகள் மறுக்கின்றன. இதனால், 12 ஆயிரம் விவசாயிகள் நாட்டில் தற்கொலை செய்துள்ளனர். இதில் பெரும்பாலானோர், கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் தற்கொலை செய்துகொண்டவர்கள்.

மாடுகளுக்கு ஆதார் கார்டு கொண்டு அதை பாதுகாக்கும் மத்திய அரசு, நாட்டில் உள்ள சாமானிய மக்களை பாதுகாக்க மறுக்கிறது.

ஒரு அரசியல் கட்சித் தலைவர் ரூ.50 ஆயிரம் நன்கொடை பெற்றால், அமலாக்கப்பிரிவு, சிபிஐ, வருமானவரி விசாரணையை எதிர்கொள்ள வேண்டியது இருக்கும். ஆனால், ஆயிரக்கணக்கில் கொள்ளையடித்தவர்களை சிவப்பு கம்பளம் விரித்து அந்த அமைப்புகள் வரவேற்பார்கள்.

இவ்வாறு மம்தா பானர்ஜி பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x