Last Updated : 14 Feb, 2018 12:20 PM

 

Published : 14 Feb 2018 12:20 PM
Last Updated : 14 Feb 2018 12:20 PM

ஆர்எஸ்எஸ் தொண்டர்களுக்கு தலைமை ஏற்று மோகன் பகவத் எல்லையில் நிற்க வேண்டும் – அசாசுதீன் ஒவைசி பாய்ச்சல்

 ராணுவத்தைக் காட்டிலும் வேகமாக போருக்கு தயாராவோம் எனக் கூறும் மோகன் பகவத், ஆர்எஸ்எஸ் ஆதரவாளர்களுக்கு தலைமை ஏற்று எல்லையில் நிற்க வேண்டும் என்று ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவருமான, எம்.பியுமான அசாசுதீன் ஒவைசி கடுமையாகப் பேசியுள்ளார்.

சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பகவத், “ போருக்கு ராணுவம் தயாராக 6 மாதங்கள் தேவை, ஆனால், எங்களின் படை 3 நாட்களில் தயாராகும்” எனத் தெரிவித்தார்.

இதற்கு நாடுமுழுவதும் பெரும் கண்டனங்கள் வந்ததையடுத்து தனது கருத்து தவறாகச் சித்தரிக்கப்பட்டுவிட்டதாக விளக்கம் அளித்தார்.

இந்நிலையில், ஐதராபாத்தில் ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவர் அசாசுதீன் ஒவைசி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

இரவு 9 மணிக்கு தொலைகாட்சிகளில் விவாதங்களில் பங்கேற்பவர்கள் காஷ்மீர் முஸ்லிம்களின் , இந்திய முஸ்லிம்களின் தேசப்பற்றைப் பற்றி விவாதிக்கிறார்கள். ஆனால், காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த ராணுவத்தில் இருக்கும் முஸ்லிம் வீரர்கள் 5 பேர் சஞ்சுவான் முகாமில் தீவிரவாதிகளால் சுடப்பட்டு நாட்டுக்காக உயிரை தியாகம் செய்துள்ளனர். அது குறித்து யாரும் பேசுவதில்லை.

உரி, பதான்கோட், நக்ரோட்டா பகுதிகளில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் இருந்து நாம் இன்னமும் பாடம் கற்கவில்லை. இந்த தாக்குதல்களுக்கு பாஜக அரசு என்ன விதமான காரணங்களையும், பொய்யான விளக்கங்களையும் தெரிவிக்கப் போகிறது.

நாட்டின் புலனாய்வுத் துறை சஞ்சுவான் ராணுவ முகாம்மீது தீவிரவாதிகள் நடத்த இருக்கும் தாக்குதலை முன்கூட்டியே கண்டுபிடிப்பதில் தோல்வி அடைந்துவிட்டது.

பிரதமர் மோடி தனது சுற்றுலாவை முடித்து தற்போது வேலைபளு இன்றி இருப்பார். ஆனால், இந்த தாக்குதல்கள் குறித்து அவர் இன்னும் ட்விட் செய்யவில்லை.

பாங்காக் நகரில் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகரும், பாகிஸ்தான் பாதுகாப்பு ஆலோசகரும் பேச்சு நடத்தியதில் என்ன முன்னேற்றம் இருக்கிறது..

ராணுவத்தைக் காட்டிலும் போருக்கு வேகமாகத் தயாராவோம் என ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் பேசியுள்ளது ராணுவத்தினரை உணர்வுகளை புதைக்கும் செயலாகும்.

ஒரு கலாச்சார அமைப்பு தனது ஆதரவாளர்களுக்கு ராணுவம் போல் எப்படி பயிற்சி அளிக்க முடியும்?. அப்படி என்றால், ராணுவத்தைக் காட்டிலும் ஆர்எஸ்எஸ் படை வலிமையானவர்கள், திறமையானவர்கள் என்று மோகன் பகவத் கூறுகிறாரா?. அவரின் வார்த்தைகளை தீவிரமாக ஆய்வு செய்ய வேண்டும்.

ஆர்எஸ்எஸ் ஆதரவாளர்களையும், ராணுவத்தையும் எப்படி ஒப்பிட முடியும்?. நம்முடைய ராணுவத்துடன் யாரையும் ஒப்பிட முடியாது. ராணுவத்தினரின் உணர்வுகளை குழிதோண்டி புதைப்பது மோகன்பகவத்தின் பேச்சாகும்.

ஒரு ராணுவ வீரரை உருவாக்க என்ன செய்கிறார்கள் என்பது மோகன் பகவத்துக்கு தெரியுமா?, எப்படி துணிச்சலாக எல்லையில் நின்று போரிட்டு நமது வீரர்கள் உயிரை தியாகம் செய்கிறார்கள் தெரியுமா?

ராணுவம் குறித்து பேசும் முன், ஆர்எஸ்எஸ் ஆதராவாளர்களுக்கு தலைமை ஏற்று எல்லையில் சென்று மோகன் பகவத் நிற்க வேண்டும்

இவ்வாறு ஒவைசி பேசினார்.

வழக்குப்பதிவு

இதற்கிடையே ராணுவத்தினர் குறித்து அவதூறாகப் பேசியதற்காக ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் மீது பிஹார் மாநிலத்தின் முசாபர்பூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. எம். ராஜு நய்யார் எனும் வழக்கறிஞர் இந்த வழக்கை தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு நாளை விசாரணக்கு வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x