Published : 28 Mar 2024 05:44 PM
Last Updated : 28 Mar 2024 05:44 PM

தேசப் பாதுகாப்பை பலவீனமாக்கும் ‘அக்னி வீரர்’ திட்டத்தை காங். நிறுத்தும்: கார்கே வாக்குறுதி

புதுடெல்லி: மத்திய அரசு அறிமுகப்படுத்தி உள்ள அக்னிபாத் திட்டம் நாட்டின் பாதுகாப்பை பலவீனப்படுத்தி உள்ளது என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “அக்னி வீரர் திட்டத்தில் மேம்பாடுகளையும் மாற்றங்களையும் செய்ய தயாராக இருப்பதாக நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் கூறி இருக்கிறார். கோடிக்கணக்கான தேசபக்தியுள்ள இளைஞர்கள் மீது மோடி அரசால் திணிக்கப்பட்ட அக்னிவீர் திட்டம் இனி வேலை செய்யாது என்பதையே இது காட்டுகிறது.

முதலில் லட்சக்கணக்கான இளைஞர்களின் எதிர்காலத்துடன் விளையாடிய மோடி அரசு, இப்போது தேர்தல் காரணமாக அக்னி வீரர் திட்டத்தில் உள்ள குறைகளை ஏற்றுக்கொண்டு பேசுகிறது. இந்தத் திட்டத்தைக் கொண்டு வந்ததற்காக அவர் முதலில் தேசப்பற்றுள்ள நமது இளைஞர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், அக்னி வீரர் திட்டத்தை நிறுத்தும். இதற்கான உறுதியை காங்கிரஸ் அளித்துள்ளது. அக்னிபாத் திட்டம் நமது தேசிய பாதுகாப்பை பலவீனப்படுத்தி உள்ளது. இப்போது எந்த இளைஞரும் ராணுவத்தில் சேர விரும்பவில்லை.

"ஜெய் ஜவான்" பிரச்சாரத்தைத் தொடங்குவதன் மூலம் சுமார் 1.5 லட்சம் இளைஞர்கள் மற்றும் பெண்களின் அவல நிலையை காங்கிரஸ் கட்சி எடுத்துக்காட்டியுள்ளது. இந்த ஆள்சேர்ப்புத் திட்டத்தால் ராணுவம் நற்பெயரையும், நிதிப் பாதுகாப்பையும் இழந்துள்ளது. இதன் காரணமாக எதிர்கால அக்னி வீரர்கள் மிகவும் அதிருப்தியடைந்துள்ளனர்.

சமீபத்தில், ஓய்வு பெற்ற முன்னாள் ராணுவ தளபதி ஜெனரல் எம்.எம்.நரவனே, அக்னிவீர் திட்டத்தின் கீழ், 75% பேர் எடுக்கப்பட்டு, 25% பேர் விடுவிக்கப்பட உள்ளதாக கூறினார். ஆனால் மோடி அரசாங்கம் அதற்கு நேர்மாறாகச் செய்து, மூன்று ராணுவப் படைகளிலும் இந்தத் திட்டத்தை வலுக்கட்டாயமாகச் செயல்படுத்தியது.

விழிப்புணர்வு பெற்றுள்ள நாட்டின் இளைஞர்கள், பாஜகவின் தேர்தல் முழக்கங்களை முற்றிலுமாக நிராகரிப்பார்கள். அவர்களின் எதிர்காலம் இருண்டு போனதற்கு பாஜக தான் காரணம்” என குற்றம் சாட்டியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x