உத்தவ் அணி வேட்பாளர்கள் அறிவிப்பு

உத்தவ் அணி வேட்பாளர்கள் அறிவிப்பு
Updated on
1 min read

மகாராஷ்டிராவில் சிவசேனா இரண்டாக உடைந்து, உத்தவ் தாக்கரே தலைமையில் சிவசேனா (யுபிடி) என்ற ஒரு அணி செயல்படுகிறது. இந்நிலையில் மக்களவைத் தேர்தலில் சிவசேனா (யுபிடி) போட்டியிடும் 16 வேட்பாளர்களின் முதல் பட்டியலை கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே நேற்று வெளியிட்டார்.

இந்தப் பட்டியலில் மத்திய முன்னாள் அமைச்சர்கள் ஆனந்த் கீதே (ரெய்காட்)மற்றும் அரவிந்த் சாவந்த் எம்.பி. (தெற்கு மும்பை) ஆகியோரின் பெயர்களும் இடம்பெற்றுள்ளன. கடந்த 2022-ம் ஆண்டு சிவசேனா 2 ஆக பிரிந்த போதும் அக்கட்சியின் தற்போதைய எம்.பி.க்கள் 5 பேரும் உத்தவ் அணியிலேயே தொடர்கின்றனர். அவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

மும்பை வடகிழக்கு தொகுதியில் அமோல் கிரிதிகர் அறிவிக்கப்பட்டுள்ளார். இதற்கு முன்பு இந்த தொகுதி எம்.பி.யாக கிரிதிகரின் தந்தை கஜனன் கிரிதிகர் இருந்தார். கரோனா தொற்று காலத்தின் போது, மகாராஷ்டிராவில் இருந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு கிச்சடி உணவு வழங்குவதற்கு ஒப்பந்தங்கள் விடப்பட்டன. அதில் ஊழல் நடந்தது தொடர்பாக அமோல் கிரிதிகருக்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பி உள்ளது. இந்நிலையில், அவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

தவிர சஞ்சய் தேஷ்முக் (யவத்மால்), நரேந்திர கெடக்கர் (புல்தானா), விநாயக் ரவுத் (ரத்னகிரி), சஞ்சய் ஜாதவ் (பர்பானி), ராஜன் விச்சாரே (தானே) உட்பட மொத்தம் 16 வேட்பாளர்களை சிவசேனா (யுபிடி) கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே அறிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in