மேற்கு வங்க பாஜக வேட்பாளருடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு

மேற்கு வங்க பாஜக வேட்பாளருடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு
Updated on
1 min read

புதுடெல்லி: மக்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை திரும்பக் கொண்டு வருவதற்காக சட்ட வாய்ப்புகளை ஆராய்ந்து வருவதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.

மேற்கு வங்கத்தின் கிருஷ்ணாநகர் தொகுதி பாஜக வேட்பாளர் அம்ரிதா ராயுடன் பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொலைபேசி மூலம் பேசினார். அப்போது அவர், “ஏழைகளிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணத்தையும் அமலாக்கத் துறையால் முடக்கப்பட்ட சொத்துகளையும் திரும்பப் பெறுவதற்கான சட்ட வாய்ப்புகளை ஆராய்ந்து வருகிறேன்.

நாட்டில் ஊழலை முற்றிலும் ஒழிக்க பாஜக உறுதிபூண்டுள்ள அதேவேளையில் ஊழல்வாதிகள் அனைவரும் தங்களை காப்பாற்றிக்கொள்ள கைகோத்துள்ளனர். மேற்கு வங்க மக்கள் மாற்றத்துக்கு வாக்களிப்பார்கள் என்று நம்புகிறேன்” என்றார்.

பிரதமர் மோடி தொலைபேசியில் பேசிய இரண்டாவது பாஜக வேட்பாளர் அம்ரிதா ராய் ஆவார். இவரது கிருஷ்ணாநகர் தொகுதியில் திரிணமூல் காங்கிரஸ் சார்பில், எம்.பி. பதவியில் இருந்து நீக்கப்பட்ட மஹுவா மொய்த்ரா போட்டியிடுவதால் இத்தொகுதி கவனம் பெற்றுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி கடந்த செவ்வாய்க்கிழமை மேற்கு வங்கத்தின் பசீர்ஹட் மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் ரேகா பத்ராவுடன் தொலைபேசியில் பேசினார். அப்போது ‘நீங்கள் சக்தியின் சொரூபம்’ என்று அவரை பாராட்டினார்.

சந்தேஷ்காலியில் திரிணமூல் காங்கிரஸ் உள்ளூர் தலைவர் ஷாஜகான் ஷேக் மற்றும் அவரது கூட்டாளிகளின் அட்டூழியங்களுக்கு எதிராக குரல் எழுப்புவதில் ரேகா முக்கியப் பங்கு வகித்தார்.

பசீர்ஹட் மக்களவைத் தொகுதியின் கீழ் உள்ள கிராமத்தை சேர்ந்த ரேகா பத்ராவை, அத்தொகுதி வேட்பாளராக பாஜக நிறுத்தியுள்ளது.

கடந்த மார்ச் 6-ம் தேதி பராசத் நகரில் பிரதமர் நரேந்திர மோடியின் பொதுக்கூட்டத்துக்கு இடையில் பிரதமரை சந்தித்து சந்தேஷ்காலி பெண்களின் துயரத்தை பிரதமரிடம் விவரித்த பெண்கள் குழுவில் ரேகா பத்ராவும் இடம்பெற்றிருந்தார்.

வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள சந்தேஷ்காலியில் ஷாஜகான் ஷேக் மற்றும் அவரது கூட்டாளிகள் மீது அடுக்கடுக்கான புகார்கள் எழுந்தன.

இவர்களின் நில அபகரிப்பு மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in